0 (1)

யூடியூபில் வெளியிடப்படும் டீசர் மற்றும் டிரெய்லர்களுக்குக் கிடைக்கும் ஹிட்ஸ் என்கிற பார்வையிடலுக்கும் படத்தின் வெற்றிக்கும் துளியும் சம்மந்தமில்லை.

யூடியூபில் கிடைக்கும் ஹிட்ஸ்தான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று சொன்னால்…

கற்றவித்தைகளை மொத்தமாக இறக்கி லிங்குசாமி இயக்கி, சூர்யா நடித்த அஞ்சான் படம் 500 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

கையில் இருக்கும் மொபைல் போன் மூலம் ஒரு படத்தின் டிரெய்லரை, டீசரை பார்க்க முடிகிறது என்பதற்காக அவற்றை மக்கள் பார்க்கிறார்கள்.

அதை வைத்து ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்க முடியாது.

யூடியூப் ஹிட்ஸ்தான் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்றால், அஜித்தை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் 100 கோடி லாபம் சம்பாதித்திருக்க வேண்டும்.

உண்மை என்ன?

அஜித்தை வைத்து அசல், பில்லா-2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் பல கோடி நஷ்டத்தையே சந்தித்திருக்கிறார்கள்.

இவற்றில் அசல் படத்தைத் தயாரித்தது சிவாஜி பிலிம்ஸ்.

அசல் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் பேனரில் படம் தயாரிப்பதையே விட்டுவிட்டனர்.

பில்லா-2 படத்தைத் தயாரித்தவர்களும் கோடம்பாக்கத்துக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு போய்விட்டனர்.

வீரம் படத்தைத் தயாரித்த விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் அடுத்த ஜென்மத்தில் கூட அஜித்தை வைத்து படம் எடுக்க மாட்டார்கள்.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தயாரித்தது பெயரளவில் ஏ.எம்.ரத்னம் என்பதால் அவருக்கு பிரச்சனையில்லை. உண்மையான தயாரிப்பாளர் வெளிநாடு வாழ் அஜித்தின் நண்பர்.

எனவே இவ்விரு படங்களின் நஷ்டக்கணக்கு துல்லியமாக வெளிவரவில்லை. ஆனாலும் மிகப்பெரிய நஷ்டத்தையே இவ்விரு படங்களும் ஏற்படுத்தின.

ஆக… யூடியூபில் ஒரு படத்தின் டீசரோ… டிரெய்லரோ சாதனை படைப்பது ஒரு விஷயமே இல்லை.

அந்த சாதனை சம்மந்தப்பட்ட நடிகனின் ரசிகர்கள், மற்ற நடிகனின் ரசிகர்களிடம் கெத்து காட்டவோ, அவர்களை கலாய்க்கவோ உதவும் என்பதற்கு மேல் ஒரு புண்ணாக்கும் இல்லை.

இது புரியாமல் யூடியூபில் டிரெய்லர் வெளியிடுவதையும், டீசர் வெளியிடுவதையும் மிகப்பெரிய கொண்டாட்டம்போல் சித்தரித்து வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் சூர்யா நடித்த 24 படத்தின் டீசரை வெளியிட்டனர்.

24 படத்தின் டீசர் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னதாகவே, பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டரில் கத்தும் சில காக்கைகளுக்குப் போட்டுக்காட்டினார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

24 டீசர் பற்றி ஆகா ஓகோவென புகழ்ந்து பில்ட்அப் கொடுக்கும்படி ட்விட்டர் காக்கைகளை செமத்தியாக கவனித்து அனுப்பினார்.

ஞானவேல்ராஜாவின் கட்டளைப்படி 24 படத்தின் டீசர் பற்றி ட்விட்டர் காக்கைகள் கத்தியும் கூட பிரயோஜனமில்லை.

யூடியூபில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான தெறி படத்தின் டீசர் வெளியான முதல் 5 நிமிடத்தில் 25 ஆயிரம் லைக்ஸ் பெற்றது. 15 நிமிடத்தில் 50 ஆயிரம் லைக்ஸ், 75 நிமிடத்தில் 75 ஆயிரம் லைக்ஸ், 6 மணி நேரத்தில் 1 லட்சம் லைக்ஸ், 50 மணி நேரத்தில் 2 லட்சம் லைக்ஸ் என சாதனை படைத்துக் கொண்டேபோனது.

அதற்கு முன் வெளியான அனைத்து டீசர்களின் சாதனைகளையும் முறியடித்த தெறி டீசர், சுமார் 29 மணி நேரத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

தெறியின் சாதனையோடு ஒப்பிடும்போது 24 படத்தின் டீசரின் சாதனை ஒன்றுமே இல்லை.

24 டீசர் வெளியாகி ஏறக்குறைய 20 மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் பேர் மட்டுமே பார்த்தனர்.

தெறி டீசரை 30 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் பார்த்தனர். அதே 30 லட்சத்தை எட்ட 24 டீசருக்கு 15 நாட்கள் பிடித்தது.

இன்றைய தேதிவரை 24 படத்தின் டீசரை 37 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால் தெறி படத்தின் டீசரை இதுவரை 96 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் தெறி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி இருக்கிறது.

வழக்கம்போல் முந்தைய படங்களின் யூடியூப் சாதனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

டிரெய்லர் வெளியான 21 மணி நேரத்துக்குள் 15 லட்சம் ஹிட்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Comments

comments