Ccd6eWsUEAAogGs

‘தெறி’ படத்திற்குப் பிறகு தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ’24’. தமிழில் ‘அலை, யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் இயக்கிய ‘மனம்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தமிழில் ’24’ படத்தை இயக்கி முடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இதற்கு முன் இப்படத்தின் சில போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தையும், திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தன. அதனால், படம் எப்படியும் வித்தியாசமாக இருக்கும் என்ற எண்ணத்தில் படத்தின் வியாபாரமும் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யா எத்தனை கதாபாத்திரங்களில் நடிக்கிறார், என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. மேலும் படம் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட கதை என்ற பேச்சும் நிலவி வருகிறது. தொடர்ந்து ‘அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி’ படங்களின் தோல்வியால் துவண்டிருந்த சூர்யா கூட ’24’ போஸ்டர்களுக்குக் கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கும் விதத்தில் நாளை மறுநாள் மார்ச் 4ம் தேதி மாலை 6 மணிக்கு ’24’ படத்தின் டீசர் வெளியாகும் என நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ‘தெறி’ டீசருக்குப் போட்டியாக ’24’ டீசர் இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

 

Comments

comments