மக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ? – விஜய்யின் வேடிக்கை பேச்சுக்கு கண்டனம்
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துவிட்டது.
‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு ‘கலைப்புலி’ எஸ். தாணுவின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைக்கும் 50 -ஆவது படம்.
திரைப்பட இசைவெளியீட்டில் இசையமைப்பாளர்தான் ஹீரோ.
அதை உணர்ந்து தன்னால் முடிந்த அளவுக்கு ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பெருமை சேர்த்தார் விஜய்…
“பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர்தான் நாயகனாக இருப்பார்.
இன்றைக்கு ஒரு இசையமைப்பாளர் உண்மையில் நாயகனாக இருக்கிறார்.
விர்ஜின் பசங்களோட தலைவர் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி.க்கு இது 50-ஆவது படம். அவர், நேற்று வரை ரிக்கார்டிங் ஸ்டுடியோவிலேயே இருந்து இப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். ” என்று பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய விஜய், ‘‘என் படங்களை பற்றி நான் எப்போதுமே பேசுவதில்லை. ஆனால் இதில் பங்கேற்றவர்கள் பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
இதில் இயக்குநர்களின் ஹீரோவான மகேந்திரன் சாருடன் இணைந்து நடித்தது ஒரு இனிமையான அனுபவம்.
ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்க வேண்டும் என்ற அட்லியின் மனதில் இருந்த வெறி தான் இந்த தெறி.
அந்த வெறிக்கு செலவை பற்றி கவலைப்படாமல் உறுதுணையாக இருந்திருக்கிறார் தாணு சார்.
இதில் செல்ஃபி புள்ள சமந்தாவும் இருக்கிறார், குல்ஃபி புள்ள எமியும் இருக்கிறார்.
எப்போதுமே போலீஸுக்கு குற்றவாளிகளை பிடிக்கும். குற்றாவாளிகளுக்கு போலீஸைப் பிடிக்காது. ஆனால் இப்படத்தில் குற்றாவாளிகளுக்கும் போலீஸைப் பிடிக்கும்.”
என்று தெறி படத்தைப் பற்றி பேசிய விஜய் என்ன நினைத்தாரோ திடீரென ஜெயலலிதா, ரஜினியைப்போல் குட்டிக்கதை சொல்ல ஆரம்பித்தார்…
“ஒரு சிறுவன் தெருவோரத்தில் ரஷ்யத் தலைவர் மாவோ அவர்களின் படத்தை மட்டும் விற்றுக் கொண்டிருந்தான்.
அந்த வழியாக போன மாவோ இதை பார்த்துவிட்டு, தம்பி நீ இப்படி ஒருவருடைய படத்தை மட்டும் விற்பது சரியல்ல. மற்ற தலைவர்களின் படங்களையும் விற்க வேண்டும் என்று சொன்னாராம்.
அதற்கு பதிலளித்த அந்த சிறுவன், மத்த தவைருங்களோட படம் எல்லாம் முன்னாடியே வித்துப் போச்சு. இது மட்டும்தான் இன்னும் விற்காம அப்படியே இருக்கு என்றானாம்”.
இப்படி ஒரு கதையை விஜய் சொன்னதும் அவரது ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதில் வேடிக்கை அல்ல வேதனை என்னவென்றால், விஜய் சொன்ன கதையில் குறிப்பிட்ட மாவோ ரஷ்ய தலைவர் அல்ல, சீனாவின் தலைவர்.
மாவோ பற்றி விஜய்க்கு தெரியாததைப்போலவே அவரது ரசிகர்களுக்கும் மாவோ யார் என்று தெரியாதது செம பொருத்தம்.
சீனாவை தவறுதலாக ரஷ்யா என்று குறிப்பிட்டுவிட்டதாக விஜய் பின்னர் விளக்கம் அளித்திருக்கிறார்.
அது ஒருபக்கம் கிடக்கட்டும், தான் சொன்ன கதையில் மாவோவை அவமானப்படுத்தும் வகையில் அதாவது மக்களின் செல்வாக்கை இழந்தவர் என்பதுபோல் கதைவிட்டிருக்கிறாரே விஜய்?
தேர்தல் நேரம் என்பதால் கம்யூனிஸ்ட்டுகள் பிஸி. இல்லை என்றால் செமத்தியாக சிக்கி இருப்பார் விஜய்.
யுவர் ஹானர்… சேகுவேரா பற்றி சீமான்களும், மாவோ பற்றி விஜய்களும் பேசுவதை உடனடியாய் தடை செய்ய வேண்டும்.