NTLRG_160324122201000000

கோடம்பாக்கத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பேய் அட்டகாசம்தான் என்று சொல்கிற அளவுக்கு பேய் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஒரே நேரத்தில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக பல ஹாரர் படங்கள் இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. ஆனபோதும் நீண்ட க்யூவில் நிற்கும் பேய் படங்களை இப்போது அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சந்தானமும் தில்லுக்குத்துட்டு என்றொரு பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பேய் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் வேடத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். அதோடு, இப்படத்தில் பேய்களின் தலைவனாக மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி ஏராளமான கேரக்டர்கள் அந்த படத்தில் பேயாகத்தான் நடித்திருக்கிறார்களாம். கதைப்படி, பேய்கள் கூட்டத்தில் போய் சிக்கிக்கொண்டு பின்னர் தப்பித்து வருவதுதான் சந்தானத்தின் கேரக்டராம்.

மேலும், பேய்களிடம் அவர் சிக்கியிருக்கும்போது, அனைத்து பேய்களும் ஒன்று கூடி மாநாடு நடத்துவார்களாம். அப்போது உள்ளே புகுந்து விடும் சந்தானம், அவர்களிடம் சில விசயங்களைப்பற்றி பேசி பெரிய அளவில் குழப்பி விடுவாராம். அந்த காட்சி செம காமெடியாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை-2 என சில காமெடி பேய் படங்கள் வந்தபோதிலும் இந்த தில்லுக்குத்துட்டு அதிரடியான காமெடி பேய் படமாக தயாராகி உள்ளதாம்.

 

Comments

comments