pts-fasing-740x431

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல தமிழ்சினிமாத்துறையிலும் காமெடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

நேற்றும் ஒரு காமெடி அரங்கேறியது.

விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ.வும் அவரை வைத்து புலி படத்தைத் தயாரித்தவருமான பி.டி.செல்வகுமார், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றக் கோரி திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதுவும் எங்கே… பொதுமக்களுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத ஒரு ப்ரிவியூ தியேட்டர் வளாகத்தில்.

பிடி.செல்வகுமாருக்கு என்ன பிரச்சனை?

தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனராம்.

அவர்களை தயாரிப்பாளர் சங்கம் காப்பாற்றவில்லையாம்.

அதனால் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து, அவசர அவசரமாக ஒரு ப்ளக்ஸ் பேனரை ரெடி பண்ணி நான்கைந்து பிளாஸ்டிக் நாற்காலியைப்போட்டு உட்கார்ந்தார்.

பி.டி.செல்வகுமாரின் உண்ணாவிரதத்துக்கு திரையுலகவே திரண்டு வருவதாக மீடியாக்களுக்கு அழைப்பு.

அங்கே போனால்… பி.டி.செல்வகுமார் உடன் அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் வெகு சிலர் மட்டுமே இருந்தனர்.

டி.ராஜேந்தர் அதோ வருகிறார்… இதோ வருகிறார் என்று பில்ட்அப் கொடுத்தனர்.

இது நம்ம ஆளு படம் ரிலீஸ் ஆகும்போது பஞ்சாயத்து நிச்சயம், இந்த நேரத்தில்போய் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் உண்ணாவிரதத்துக்குப் போனால், உஷா ராஜேந்தர் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார் என்பதை உணர்ந்த தன்மான சிங்கம் கடைசிவரை கூண்டைவிட்டே வெளியே வரவில்லை.

சாயந்தரம் வரை உண்ணாவிரத காமெடியை நடத்திவிட்டு கடையைக்கட்டினார் செல்வகுமார்.
pts-fasing.jpg1_-525x700சற்று நேரத்தில் அவரது தரப்பிலிருந்து பரபரப்பான பத்திரிகை செய்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது…

அதன் சாரம்சம் இதுதான்…

“இன்று நடைபெற்ற உண்ணாவிரத்த்தில் ஏ.எல்.அழகப்பன், டி.பி.கஜேந்திரன், ரூபன், கிருஷ்ணகாந்த், மணிமாறன், பி.டி.செல்வகுமார், ராமதுரை, அருள் சிவா, ரகு, சௌந்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுடன் இளம் தயாரிப்பாளர்களும் இணைந்து 200 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறு தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக டி.பி.கஜேந்திரன் பேசும்போது தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருக்கும் கலைப்புலி தாணு சுயநலத்துடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

தன்னுடைய நலனுக்காக ரஜினியிடம் குறுக்கு வழியில் கால்ஷீட் வாங்கிய அவர் தயாரிப்பாளர்களின் நலனில் ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை என வருத்தப்பட்டார். தயாரிப்பாளர்களின் துன்பம் அவர்கள் படும் இன்னல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றால் கபாலி படம் வெளிவருவதற்கு முன் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் தான் தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு முடிவு ஏற்படும் எனக் கூறினார்.

இதை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஆமோதித்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாளை அனைவரும் கலந்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.”

பிடி.செல்வகுமாரின் இந்த உண்ணாவிரத நாடகத்துக்கு என்ன பின்னணி?

இதற்கு விஜய்யின் ஆதரவு உண்டா?

காரணம்.. விஜய்யின் புகழில் வளர்ந்தவர்தான் பிடி.செல்வகுமார்.

விஜய்யின் பி.ஆர்.ஓ. என்ற விசிட்டிங் கார்ட்தான் அவரை இன்றைக்கு விஜய்யை வைத்து படம் எடுக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

பாத்ரூம் போவதைத் தவிர மற்ற எதையும் விஜய்யிடம் குறிப்பாக அவரது அப்பாவான தென்னிந்தியாவின் அமிதாப்பச்சனான எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்காமல் செய்ய மாட்டார்.

தாணுவுக்கு எதிராக இப்படி ஒரு உண்ணாவிரதம் இருப்பதை விஜய்யிடம் அவர் சொன்னாரா?

அதற்கு விஜய் அனுமதி கொடுத்தாரா?

இப்படி பல கேள்விகள் எழும் அதே நேரம், இந்த உண்ணாவிரதத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று விசாரித்தோம்…

புலி படத்தை எடுத்து கையை சுட்டுக்கொண்ட பிடி.செல்வகுமார் சமீபத்தில் போக்கிரி ராஜா என்ற படத்தை தயாரித்தார்.

இந்தப் படம் ஒருநாள் கூட ஓடவில்லை.

தவிர அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் சம்பள பாக்கி இருக்கிறதாம்.

பணம் கேட்டு பலரும் அவரை நெருக்கி வருவதால், அதிலிருந்து தப்பிக்க இப்படியொரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது..

சுமார் 15 வருடங்களுக்கு மேலாக விஜய் நடிக்கும் படங்களை வாங்க வரும் விநியோகஸ்தர்களுக்கு மீடியேட்டராக செயல்பட்டு வருகிறார் செல்வகுமார்.

இந்த வகையில் பல கோடி சம்பாதித்துள்ள அவர், விஜய் தற்போது நடித்து வரும் தெறி படத்தையும் தானே பிசினஸ் செய்து தருவதாகவும், அதற்கு உரிய கமிஷனை தனக்கு தர வேண்டும் என்றும் தாணுவிடம் கேட்டிருக்கிறார்.

சினிமா வணிகத்தில் பல வருடம் அனுபவம் வாய்ந்த தாணு இதற்கு உடன்படவில்லை.

“உனக்கு ஏதாவது பணம் வேணும்னா வாங்கிட்டுப்போ… என் படத்தோட பிசினஸை நான் பாத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டாராம்.

எனவேதான் அவருக்கு எதிராக உள்ள ஆட்களை திரட்டி உண்ணாவிரத நாடகத்தை நடத்தி இருக்கிறார்.

இந்தக்கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…

விஜய்யை வைத்து புலி படத்தை எடுத்தவருக்கும்…

தெறி படத்தை எடுத்து வருபவருக்கும் இடையில் நடக்கும் இந்தப் பிரச்சனையில் விஜய் வேடிக்கை பார்ப்பது ஏன்?

 

Comments

comments