????????????????????????????????????????????????????????????????

கே.பாக்யராஜின் உதவியாளர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கியுள்ள படம் யானை மேல் குதிரை சவாரி. நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசாப சாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமாலயன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில், கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஜாகுவார் தங்கம், தாஜ்நூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கே.பாக்யராஜ் பேசும்போது, 16 வயதினிலே படத்தில் என்னை கிளாப் அடிக்க சொன்னார் எங்க டைரக்டர் பாரதிராஜா. அப்ப நான் ஒரேயொரு ஆள்தான் அசிஸ்டெண்ட். ஆனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. கிளாப் அடிக்க சொன்னால் கையில் கட்டையை தூக்கிக்கொண்டு திரிய வேண்டும். டயலாக் சொல்லிக்கொடுப்பது போன்ற அடுத்தகட்ட வேலைகளை செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் அசவுகரியமாக இருக்குமே என்று அதிலிருந்து தப்பிக்க நினைத்தேன். அப்போது யாரிடம் இந்த கிளாப்பை கொடுக்கலாம் என்றபோது சேகர் என்கிற பெயிண்டர் அருகில் நின்றார். அடுத்து நான் கிளாப் அடித்தபோது சரியாக சீன் நம்பரை சொல்ல முடியாததுபோல் உளறினேன். அதைப்பார்த்து என்னய்யா நீ கிளாப்கூட அடிக்க தெரியல என்று சொன்ன டைரக்டர், உடனே அருகில் நின்ற சேகரை கூப்பிட்டு இங்க வாய்யா நீ கிளாப் அடி என்று சொன்னார். அதை வாங்கிய அவர் ஸ்டைலாக கிளாப் அடித்தார். நமக்கு ஒருத்தன் சிக்கிட்டான் என்று நான் நைசாக ஒதுங்கிக்கொண்டேன்.

அப்படி நான் திருட்டுத்தனம் செய்தது ஏன் இப்போது ஞாபகம் வந்தது என்றால், பாக்யாவில் சிவகுமார் என்பவர் அவரது கையெழுத்து மோசமாக இருக்கும் என்பதால், இன்னொருவரை வைத்து எழுதி வாங்கி வந்து என்னிடம் திருட்டுத் தனமாக கொடுப்பார். ரொம்பநாள் இது எனக்கு தெரியவே இல்லை. அப்புறம் ஒருநாள்தான் இவர் ஏன் நம்ம முன்னாடி எழுதமாட்டேன் என்கிறார். தனியா போய் எழுதிவிட்டு வருகிறார் என்று கவனித்த போதுதான் அவர் வேறு ஒருவரிடம் எழுதி வாங்கி வருகிறார் என்பது தெரிந்தது.

அதேபோல் பாக்யாவில் வேலை செய்தவர் தான் இந்த யானை மேல் குதிரை சவாரி படத்தை இயக்கிய கருப்பையா முருகன். ஆனால் அங்கே வேலை செய்து கொண்டே எனக்குத் தெரியாமல் சினிமாவிலும் திருட்டுத்தனமாக முயற்சி செய்திருக்கிறார். மேலும், என்னிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜனெல்லாம் சீன் பேசும்போது எங்க நம்மகிடடஇருக்கிறதையெல்லாம் இவர் எடுத்துக்கொள்வாரோ என்று வாயே திறக்கமாட்டார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான திருட்டுத்தனம் செய்துள்ளனர். இருப்பினும், எனது பாக்யாவில் வேலை செய்துவிட்டு சினிமாவிற்குள் வந்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தை இயக்கியுள்ள கருப்பையா முருகன், படத்தில் சகட்டுமேனிக்கு பலரை திட்டியிருக்கிறார். படம் ரிலீசாகும்போது சண்டைக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன். ட்ரெய்லர் முதலில் காமெடியாக உள்ளது. பிறகு சீரியசாக இருக்கிறது. அதனால் என்ன பண்ணி வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. என்றாலும் படத்தை நன்றாக எடுத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் கே.பாக்யராஜ்.

இயக்குனர் பேரரசு பேசுகையில், இந்த படத்தை இயக்கியிருக்கும் கருப்பையா முருகன் அங்கங்க பணத்தை வாங்கி தன் பெயரில் இந்த படத்தை தயாரித்திருப்பதாக சொன்னார். அது தப்பில்லை. ஆனால் அங்கங்க இருந்து கதையை திருடி படமெடுப்பதுதான் தவறு. இவருக்கு அப்படியெல்லாம் செய்ய தெரியாது. ஏனென்றால் இவர் கே.பாக்யராஜிடமிருந்து வந்திருக்கிறார். குழந்தைகளை அப்பா குதிரை சவாரி செய்வாங்க. சில சமயங்களில் நல்ல ஹைட் வெயிட்டா பொண்ணங்க இருந்தால் குதிரை மாதிரி வர்றா என்று சொல்வோம். சினிமாவைப்பொறுத்தவரை ஓடுற குதிரை மீது தான் ஏறுவார்கள். அந்த மாதிரி ஓடிக்கிட்டே இருக்கிற டைரக்டர்கள்கிட்ட தயாரிப்பாளர்கள் கதையே கேட்க மாட்டார்கள். ஹீரோக்களும் அப்படித்தான்.

மேலும், யானை மேல குதிரை சவாரின்னா யானை மேல குதிரை வேகத்துல போவது என்பதுதான் அர்த்தம். இந்த படத்தின் டரெய்லரில் வீரபாண்டிய கட்டபொம்மன். பூம்புகார் போன்ற பல படங்களில் காட்சிகளும் வந்து சென்றன. இந்தியக் கடனை அடைக்கப்போறீங்களா. இலங்கை மக்களை மீட்க போறீங்களா என்ற பாடல் வரிகள் சிறப்பாக உள்ளது. அந்த வகையில் பாடலாசிரியராக இப்படத்தின் இயக்குனர் வெற்றியடைந்து விட்டார். பிரபல ஹீரோக்களை வைத்து படமெடுத்து வெற்றி பெறுபவர்களை விட, புதுமுகத்தை வைத்து எந்த டைரக்டர் வெற்றி படம் கொடுக்கிறரோ அவர்தான் சிறந்த டைரக்டர். அந்த வகையில் கருப்பையா முருகன் முழுமையான வெற்றிடைய என் வாழ்த்துக்கள்.

 

Comments

comments