ilayaraja_700x525_71439696794

தேசிய திரைப்பட விருதுகளுக்கு இருந்த மரியாதை, கௌரவம் காலப்போக்கில் காலாவதியாகிவிட்டன.
அதிலும் குறிப்பாக, கடந்த சில வருடங்களாக தகுதியற்ற படங்களுக்கும், கலைஞர்களுக்கும் தேசிய திரைப்பட விருதுகள் வாரி இறைக்கப்படுகின்றன.

சிபாரிசு, அரசியல் செல்வாக்கு, விருது தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜூரிகளை காக்காய் பிடித்து விருதுகள் பெறுவது போன்ற திரைமறைவு அசிங்கங்கள் வெட்டவெளிச்சமானதால் தேசிய திரைப்பட விருதுகளின் சாயம் வெளுக்கத்தொடங்கிவிட்டன.

கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட 62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்படத்துக்கான விருது குற்றம் கடிதல் படத்துக்குக் கிடைத்தது.

தரமான படத்துக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளதாக பாமர ரசிகர்கள் சந்தோஷப்பட்டநிலையில், குற்றம் கடிதல் படத்துக்கு விருது கிடைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகி சினிமா ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஜூரிகளில் ஒருவராக ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இடம் பெற்றிருந்தார்.

குற்றம் கடிதல் படத்துக்கு விருது கிடைக்க ‘ஏற்பாடு’ செய்தால் உங்கள் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தங்கர்பச்சானுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

தன் மகனை கதாநாயகனாக்குவதாக அவர் சொன்னதை நம்பி குற்றம் கடிதல் படத்துக்கு விருது கிடைக்க செய்தார் தங்கர்பச்சான் என்ற தகவல் வெளியானது.

இப்படியான பேரங்களின் அடிப்படையிலேயே பலருக்கும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்துக்கும், அப்படத்தின் படத்தொகுப்பாளர் மறைந்த கிஷோருக்கும், அதில் நடித்த சமுத்திரகனிக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன.

இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர, தாரை தப்பட்டை படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, சாகர சங்கமம் (தெலுங்கு) -1984, சிந்து பைரவி (தமிழ்) – 1986, ருத்ரவீணா (தெலுங்கு) – 1989, பழசிராஜா (மலையாளம்) சிறந்த பின்னணி இசை – 2010 ஆகிய படங்களுக்காக நான்குமுறை தேசிய விருதுகளைப்பெற்றுள்ளார் இளையராஜா.

இப்போது தாரைதப்பட்டை படத்துக்காக இளையராஜா பெறுவது ஐந்தாவது முறை.

தமிழ்சினிமாவின் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு ஐந்தாவதுமுறையாக தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிற அதே நேரம், மனசை உறுத்துகிற விஷயமும் உண்டு.

63 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஜூரிகளில் ஒருவராக இளையராஜாவின் தம்பி கங்கை அமரனும் இடம்பெற்றுள்ளார்.

தேசிய விருது மட்டுமல்ல, அதற்கு மேலான விருதுகளுக்கும் தகுதியானவர்தான் இளையராஜா.

அதே சமயம், அவரது தம்பி ஜூரியாக இருந்ததால், தற்போது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

அண்ணனுக்காக தம்பி செய்த சிபாரிசின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இளையராஜா போன்ற மேதைகள் இதுபோன்ற அற்ப சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

யெஸ்… இந்த தேசிய விருதை இளையராஜா வாங்கக் கூடாது…

நேர்மையாய் நிராகரிக்க வேண்டும்.

Comments

comments