வண்ணங்கள்… ஒரு நாளில் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பு படரும் மெல்லிய வெளிச்சத்தில் இருந்து அந்தி சாய்ந்த பிறகான செவ்வானம் வரை பல்வேறு வண்ணங்களை அணிவகுத்துக் காண்பிக்கிறது இயற்கை. இலட்சக்கணக்கான வண்ணங்களை நமது கண்களும் மூளையும் பிரித்து அறிய முடியும். இதற்கு மின்காந்த நிறமாலையே ( Eletro Magnetic Spectrum ) காரணம் ஆகும். கண்களால் காணக்கூடிய இந்த வண்ணங்களை கேமராவில் படம் பிடித்து அதன் வண்ணம் மாறாமல் ப்ரிண்ட் செய்யும் கலையைக் கண்டறிந்தது ( வண்ணப் புகைப்படம், வண்ணத் திரைப்படம் ) சென்ற நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். வண்ணப் படம் என்றாலே கலர் கரெக்‌ஷன் எனும் பணியும் அவசியமானதாகும். புகைப்பட ப்ரிண்ட், திரைப்பட ப்ரிண்ட் என இரண்டுமே இதில் அடங்கும். ஃபிலிம் காலகட்டம் முடிந்து டிஜிட்டல் யுகமாகிவிட்டாலும் ஃபிலிமே அடிப்படை என்பதால் ஃபிலிமில் இருந்தே சில உதாரணங்களைப் பார்ப்போம்.

Billa2

படம் பிடிக்கும்போது கண்ணால் பார்த்த வண்ணங்களை ப்ரிண்ட்டிலும் கொண்டுவர வேண்டும். இதுதான் அடிப்படை. உங்கள் வீட்டில் உள்ள பழைய நெகட்டிவ்-ஐ எடுத்துப் பாருங்கள். கருநிற முடி வெண்மையாகவும், வெந்நிறம் கருப்பாகவும் ஃபிலிமில் பதிவாகியிருக்கும். இந்த ஃபிலிமை நெகட்டிவ் என்கிறோம். அசலான வண்ணத்தின் எதிர்மறை ( Negative ) வண்ணங்களைப் பதிவு செய்வதால் அந்த ஃபிலிம் நெகட்டிவ் என பெயர் பெற்றது. அந்த நெகட்டிவ் ஃபிலிமில் இருந்து ப்ரிண்ட் போடும்போது அசல் வண்ணங்கள் ப்ரிண்ட்டிங் பேப்பரில் பதிவாகும். இதுவே நாம் ஆல்பமாக சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள்! ( Photos ) போட்டோ ஸ்டுடியோக்களில் நெகட்டிவ் –இல் இருந்து ப்ரிண்ட் செய்யும்போது கலர் கரெக்‌ஷன் செய்து ப்ரிண்ட் போடுவார்கள். அவ்வாறு கரெக்‌ஷன் செய்யும்போது மனித முகங்களின் சரும நிறம் ( Skin tone ), முடியின் கருமை நிறம், படத்தில் உள்ள வெள்ளை நிறத்தின் அசலான வெண்மை போன்றவற்றை ஓரளவிற்கேனும் துல்லியமாக இருக்கும்படி கரெக்‌ஷன் செய்து ப்ரிண்ட் செய்ய வேண்டும். சில தருணங்களில் கருப்பாக இருக்கும் பலரது முகத்தில் இளஞ்சிவப்பு, ரோஸ் போன்ற வண்ணங்களைக் கூட்டி ப்ரிண்ட் செய்து தருவார்கள்.

வாடிக்கையாளர்களைக் கவரும்பொருட்டு சில ஸ்டுடியோக்களில் இப்படி செய்வதுண்டு. உங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் சைஸ் நெகட்டிவ் அல்லது டிஜிட்டில் வடிவில் உள்ள போட்டோவை இரு வேறு ஸ்டுடியோக்களில் கொடுத்து ப்ரிண்ட் செய்து பாருங்கள். இரண்டிலும் உள்ள நிற வேறுபாடுகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். கலர் கரெக்‌ஷன் செய்த இரு வேறு நபர்களின் தனிப்பட்ட ரசனை மற்றும் அனுபவமே இந்த வேறுபாட்டுக்கு காரணமாகும். ஓரளவிற்கு தரமாக ப்ரிண்ட் போடும் ஸ்டுடியோக்களை வாடிக்கையாளர்கள் நாடி செல்வர். ஒரு புகைப்படத்திற்கே இந்த அளவுக்கு தரத்தை எதிர்பார்க்கிறோம் என்றால் வெள்ளித்திரையில் கோடிக்கணக்கானோர் கண்டுகளிக்கும் திரைப்படத்தின் look -கிற்காக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் எந்த அளவுக்கு மெனக்கெடுவார்? அந்த வகையில் ஒளிப்பதிவாளர்களின் தேவைக்கேற்ப வண்ணங்களின் தரத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப கலைஞர்தான் கலரிஸ்ட் ( Colorist ).

bfgdg

சுருக்கமாக அந்தப் பணியின் பெயர் DI. நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் போன்ற மக்களுக்கு அறிமுகமான கலைஞர்கள் மட்டுமின்றி ஒரு திரைப்படத்தின் தரத்திற்காக திரைக்குப் பின்னால் உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளம். அவர்களுள் கலரிஸ்டுகளும் பிரதானமானவர்கள். ஏனெனில் அந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் பொறுமையுடனும், ஒருமுகத் தன்மையுடனும், கிரியேட்டிவிட்டியுடனும் கலர் கரெக்‌ஷன் செய்து அப்படத்தின் இறுதி வடிவத்தை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் இறுதிக்கட்ட பணியை மேற்கொள்பவர் கலரிஸ்டே ஆவார். உதாரணத்திற்கு, சூப்பர் ஸ்டார் திரையில் சிவப்பாக இருக்க வேண்டுமா? அல்லது ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டுமா? அல்லது மஞ்சள் வண்ணத்தில் மினுக்க வேண்டுமா என்பதை ஒளிப்பதிவாளரும் கலரிஸ்டுமே இணைந்து முடிவு எடுப்பார்கள். இதில் இயக்குநர்களின் ஒப்புதலும் கருத்தில் கொள்ளப்படும்! கலர் கரெக்‌ஷன் ஏன் அவசியமாகிறது? சினிமா ஒரே நாளில் எடுத்து முடிக்கப்படுவது இல்லை! பல நாட்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு தட்பவெட்ப சூழ்நிலைகளில், பல்வேறு நிறங்களையுடைய மனிதர்களைக் கொண்டு, பல்வேறு மாறுபட்ட ஒளி அளவுகளில் படம் பிடிக்கப்படும். நடைமுறையில் எண்ணற்ற சிக்கல்கள் உண்டு. க்ளோஸ் அப் ஷாட் எடுத்து முடித்துவிட்டு Wide Angle எடுக்கும்போது Lighting Condition மாறியிருக்கும். இவ்வாறு ஆயிரக்கணக்கில் ஷாட்கள் இருக்கும். ஒவ்வொரு ஷாட்டும் ஒரே அளவிலான ஒளியை உபயோகப்படுத்தி படம் பிடித்திருக்கப்பட மாட்டாது. அவ்வாறு படம் பிடிக்க வாய்ப்பும் மிக குறைவு.

paruthiveeran

அதிகாலை, சுட்டெரிக்கும் வெயில், மாயஜாலம் நிகழும் மாலைவேளை, கும்மிருட்டு என பல்வேறு காலகட்டங்களில் படம் பிடித்திருப்பார்கள். இவை அனைத்தும் ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி ஒரே சீரான Density ( Brightness ) இருக்கும்படி செய்வதே கலர் கரெக்‌ஷனில் அடிப்படையான முதற் பணியாகும் அதிகாலை முதல் மஞ்சள் வெயில் மறையும் வரை சூரியனில் இருந்து சிதறலடையும் ஒளியானது, நிறமாலையில் ( Spectrum ) இருந்து வெளிப்படுத்தும் வண்ணங்களுக்கு ஏற்ப நமது வளி மண்டலத்தின் வண்ணமும் மாறிக்கொண்டே இருக்கும். இது Color Temperature எனப்படும். இதனை kelvin எனும் அளவுகோளால் குறிப்பிடுவார்கள். காலையில் இருந்து மாலை ஏழு மணி வரை Color Temperature –ன் அளவு மாற்றமடைந்துக்கொண்டே இருக்கும். ஒரு நாள் முழுவதும் படம் பிடிக்கப்பட்டு பதிவாகும் பிம்பங்கள் அவ்வபோது நிலவும் கலர் டெம்ப்ரேச்சருக்கு ஏற்ப அதன் வண்ண மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். ( Color Temperature –ஐ எளிமையாக புரிந்துகொள்ள – 60 வாட்ஸ் டங்ஸ்டன் குண்டு பல்பு, ட்யூப் லைட், சோடியம் தெரு விளக்குகள், மெழுகுவர்த்தி போன்றவற்றின் வண்ணங்கள் மாறுபடுவதற்கு அந்தந்த விளக்குகளின் பிரத்தியேகமான கலர் டெம்ப்ரேச்சரே காரணமாகும்.

தவிர, சூரியன் உதிக்கும் முன்பு நீலம், நீலத்தில் இருந்து வெண்மை, சூரியன் உதித்த பின் சிவப்பு, மஞ்சள், பின்னர் பகல் முழுக்க வெண்மை, மாலை வேளைகளில் மஞ்சள், சிவப்பு, நீலம் என தினம் தினம் வண்ண வேடிக்கைகளை வானத்தில் கண்டுகளிக்கிறோம் அல்லவா? இது எல்லாமே கலர் டெம்ப்ரேசசர் மாறுபடுவதால்தான்! ) Density –யை சீராக்கிவிட்டு வண்ண வேறுபாடுகளின்றி ஒவ்வொரு ஷாட்டையும் கலர் கரெக்‌ஷன் செய்ய வேண்டும். ஆக, ஒளி அளவு ( Density – Brightness ), வண்ண மாறுபாடுகளை சீராக்குதல் ( Color Balance ) இவை இரண்டும் கலர் கரெக்‌ஷனின் அடிப்படையான இரண்டு முக்கிய பணிகளாகும். இவை இரண்டுமே டெக்னிக்கலாக செய்யக்கூடியவை. கலர் கரெக்‌ஷன் குறித்த அடிப்படை அறிவும். குறைந்தபட்ச அனுபவமும், இயந்திரத்தை இயக்க தெரிந்திருந்தாலும் போதுமானது. ஆனால் சினிமா என்பது Visual Medium. திரைப்படத்தின் கதைக்கும், காட்சிகளின் சூழலுக்கு ஏற்பவும் கிரியேட்டிவிட்டியுடன் கலர் கரெக்‌ஷன் செய்வது ஒரு வித Mood-ஐ பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும்.

vaagaisoodavaa

உதாரணத்திற்கு, மனநலன் பாதிக்கப்பட்ட நாயகன் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் சோகமான காட்சியை பளிச்சென்று வண்ணமயமாக காண்பித்தால் அந்தக் காட்சி பார்வையாளர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே சமயம் யதார்த்தத்தில் இருந்து சற்று அப்பாற்பட்டு பச்சை வண்ணத்தில், குறைவான ஒளி அளவில் படம் பிடித்து, இளையராஜாவின் மெல்லிய குரலில் “ எங்கே செல்லும் இந்தப் பாதை ” என்று சோகமயமான பாடலை பார்க்கும் பார்வையாளர்கள் மிக எளிதில் நாயகனின் சோகத்துடன் ஒன்ற முடியும். இதுதான் சேது எனும் படத்தில் நடந்த துயரமான மேஜிக்! இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம். “ பர்ஃபி ” ( இந்தி ) படத்தில் நாயகனால் பேச இயலாது. காது கேட்காது. நாயகி லேசான மனநலன் பாதிக்கப்பட்டவர். சரி வர பேச இயலாது. ஆனால் அந்தப் படம் காதல், நகைச்சுவை என கொண்டாட்ட மனநிலையில் எடுக்கப்பட்ட படம். வண்ணமயமாக பளிச்சென்று இருக்கும். அதன் ஒளிப்பதிவும், கலர் கரெக்‌ஷனும் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்! படத்தின் வண்ணங்களும், Fresh Look –ம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலே குறிப்பிட்ட சேது திரைப்படம் ஃபிலிமில் படம் பிடிக்கப்பட்டு, Analazer எனும் இயந்திரத்தில் Analog முறையில் கலர் கரெக்‌ஷன் செய்யப்பட்டு ஃபிலிமில் ப்ரிண்ட் செய்யப்பட்ட படம். சமீப ஆண்டுகளில் டிஜிட்டலின் வளர்ச்சிக்கு பின்பு, டிஜிட்டல் முறையில் கலர் கரெக்‌ஷன் ( DI – Digital Intermediate ) செய்யப்பட்ட படம் பர்ஃபி. டிஜிட்டல் கலர் கரெக்‌ஷன் அறிமுகமான புதிதில் வெளியான படம் Black. ( இந்தி ) அதன் look இந்திய சினிமாவிற்கு புதிது. தமிழில் வெளியான பில்லா ( 2007 ) அதன் பிரத்தியேகமான Tone காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. மாபெரும் வெற்றியும் கண்டது. பருத்திவீரன் படத்தின் மஞ்சள் வண்ணம் அதன் Nativity –யுடன் பெரிதும் ஒன்ற செய்தது. இருவர் படத்தின் சில காட்சிகள் அதன் கால கட்டத்தைக் குறிப்பதற்காக கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கப்பட்டிருக்கும். கருப்பு வெள்ளை என்று குறிப்பிட்டதும் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் கருப்பு வெள்ளை படங்களாக பார்த்துக்கொண்டிருந்த மக்கள் முதன் முதலாக அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை வண்ணத்தில் கண்டுகளித்த போது எவ்வளவு பரவசப்பட்டிருப்பார்கள்.

Saving-private-ryan-Blood

வண்ணப்படங்களாகவே பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் Schindler’s List படத்தை கருப்பு வெள்ளையில் பார்த்தபோது அக்கதையுடன் ஒன்றி எம்மாதியான உணர்வுக்கு ஆட்பட்டிருப்பார்கள்? கலர் கரெக்‌ஷனில் இன்னொரு சவாலான விஷயம் Day for night காட்சிகள். கதைப்படி, இரவு நேரக் காட்சிகளானது சில சந்தர்ப்பங்களில் பகலில் படம் பிடிக்கப்படும். பின்னர் கலர் கரெக்‌ஷனின் போது ஒளியின் அளவைக் குறைத்து இருட்டாக்கி நீல வண்ணம் சேர்க்கப்படும். விருமாண்டி படத்தின் “உன்னை விட” பாடல், நாய்கள் ஜாக்கிரதை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், ஐ படத்தின் ரயில் மீது சண்டையிடும் காட்சிகள் போன்றவை Day For Night கலர் கரெக்‌ஷன் காட்சிகளுக்கு சில உதாரணங்கள் ஆகும். இது போன்ற காட்சிகள் கலரிஸ்டுகளின் கிரியேட்டிவிட்டிக்கு சவால் விடக்கூடியவை. நீல நிறமாக இரவைக் காட்ட வேண்டுமெனில் எந்த அளவுக்கு நீலம் என்பதில் லாஜிக் ஏதும் இல்லை. கருமையான நீலம், வெளிறிய நீலம், ஊதா கலந்த நிலம், சாம்பல் வண்ண ( Grey ) நீலம், பச்சை அல்லது சையான் ( Cyan ) கலந்த நீலம் என பல தரப்பட்ட வண்ணங்களில் இரவு போல கலர் கரெக்‌ஷன் செய்யலாம்.

மெல்ல திறந்தது கதவு படத்தில் “ஊரு சனம் தூங்கிடுச்சி” பாடல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது வெட்ட வெளிச்சமாக இருப்பதை பலரும் கவனித்திருப்பீர்கள். டிஜிட்டலுக்கு முன்பாக ஃபிலிம் காலகட்டங்களில் கலர் கரெக்‌ஷன் செய்யும்போது படத்தின் ஒலியை கேட்க முடியாது. கேமராமேன் மட்டுமே கலரிஸ்ட் அருகில் இருந்து காட்சிகளின் தன்மையை விளக்குவார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டுமெனில் ஃபிலிமில் இருந்து வீடியோவாக மாற்ற Telecine எனும் பணியை மேற்கொள்ள வேண்டும். அப்போது மேற்கொள்ளும் telecine கலர் கரெக்‌ஷன் செய்யும்போது ஒளிப்பதிவாளர்கள் உடன் இல்லாதபட்சத்தில் ”ஊரு சனம்” பாடல் போல நிகழக்கூடும். அலைபாயுதே படத்தின் “ பச்சை நிறமே ” பாடல் நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்று. வண்ணங்களை அடிப்படையாக வைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கும். அந்தந்த வண்ணங்களைப் பற்றி ஒலிக்கும்போது அதற்கு உண்டான வண்ணமும் கூடுதலாக ஜொலிக்க வேண்டும். அடுத்தமுறை அந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால் வர்ண ஜாலங்களை உற்று கவனியுங்கள். ஆயுத எழுத்து படத்தில் மாதவன் பகுதிகள் சிவப்பையும், சூர்யா பகுதிகள் பச்சையையும், சித்தார்த் பகுதிகள் நீலத்தையும் தாங்கி நிற்கும். இவையெல்லாம் காதாபாத்திர தன்மைக்கு ஏற்ப வேறுபடுத்தி அமைக்கப்படும் வண்ணக் கலவைகள். எந்த வகையைச் சேர்ந்த படம் என்பதிலும் வண்ணம் முக்கிய பங்காற்றும். நகைச்சுவை, காதல் படங்கள் பளிச்சென்று வண்ணமயமாகவும், கேங்க்ஸ்டர், திகில் படங்கள் இருள் சூழ்ந்து High Contrat -ஆக வேறு மாதிரியாகவும் வண்ணப்படுத்தப்பட வேண்டும். The God Father, Road to Perdition போன்ற கேங்க்ஸ்டர் படங்களையும், Titanic போன்ற ரொமாண்டிக் படங்களுக்கும் உள்ள வண்ண வேறுபாடுகள் எளிதில் இதை உணர்த்தும். Life of pi படத்தின் வண்ணங்கள் ஃபாண்டஸி வகையறா! Saving Private Ryan (1998) படத்தின் வண்ணம் அன்றைய காலகட்டத்தில் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால் வண்ணங்களுடன் ஒரு layer போல கருப்பு வெள்ளையும் இருக்கும்.

300brown

அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சற்று வித்தியாசமாக சிந்தித்து வண்ண மை-யுடன் ( Color dye image ) வெள்ளியும் ( Silver ) இருக்கும்படி டெவலப்பிங்-ஐ மாற்றி அமைத்து புதியதோர் look கொடுத்தார். அதாவது, படப்பிடிப்பின்போது ஒளியை உள்வாங்க ஃப்லிமில் வெள்ளி பூசப்பட்டிருக்கும். கலர் ஃபிலிம்களில் டெவலப்பிங் நடைபெறும்போது அந்த வெள்ளி அகற்றப்பட்டு வண்ண மை ( dye image ) மட்டுமே எஞ்சி நின்று வண்ணங்களை வெளிப்படுத்தும். ஆனால் இந்தப் படத்திலோ வெள்ளியும், வண்ண மையும் இணைந்து புதியதோர் உணர்வைக்கொடுத்தது. Saving Private Ryan -னின் ஆரம்பக் காட்சிகளில் போரில் கொல்லப்பட்ட ஏராளமான வீரர்களின் இரத்தம் கடலில் கலந்து கடற்கரை முழுவதும் இரத்தப்படலமாக படர்ந்திருப்பதை மாறுபட்ட tone –இல் கண்ட காட்சி பார்வையாளர்களுக்கு பெரும் மிரட்சியைத் தந்தது. ”300” (’300 பருத்தி வீரர்கள்’ என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ) படத்தின் குரூரம் அதன் வித்தியாசமான பழுப்பு வண்ணம் மற்றும் High Contrast போன்றவற்றால் மேலும் அச்சுறுத்தியது. Gladiator படத்தின் ஆரம்ப காட்சிகள் Cool look –இல் இருக்கும். பனிக்காலத்திற்குண்டான Mood க்ரியேட் ஆகும். படத்தின் இரண்டாம் பகுதியில் வன்மத்தை குறிக்கும் Warm tone உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். Matrix படம் முழுக்கவே பச்சை வண்ணம் கையாளப்பட்டிருக்கும். Grey எனும் படத்தில், அதன் தலைப்புக்கேற்ப படம் முழுக்க சாம்பல் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.

 

கதை நடைபெறும் இடம் பனி அடர்ந்த காடு என்பதால் அந்த வண்ணம் கூடுதல் சுவாரஸ்யத்தை உண்டாக்கியது. Black Hawk Down படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு பச்சை, மஞ்சள், சாம்பல், நீலம் என பல வண்ணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாகை சூட வா படத்தில் அதன் காலகட்டத்திற்கான Mood கொடுக்க பழுப்பு – மஞ்சள் வண்ண tone கொடுக்கப்பட்டிருக்கும். ஹேராம் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வண்ணத்திலும், நிகழ்கால காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் படமாக்கப்பட்டருக்கும். அதற்கு முன்பாகவே The Road Home ( 1999 – Chineese ) படத்திலும் இதே யுக்தி கையாளப்பட்டிருக்கும். பிரதான கதாபாத்திரத்தின் பழைய நினைவுகள் பசுமையாக நினைவில் உள்ளதாகவும், தற்கால சூழல் வண்ணமிழந்து வெறுமையை பிரதிபலிப்பதின் குறியீடாக இது போல காண்பிக்கப்பட்டிருக்கும். முதல்வன் பட பாடலான “ஷக்கலக்க பேபி” வீடியோ ஆல்பம் எனும் உணர்வை தூண்டும் வகையில் பல்வேறு வண்ணங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும். கஜினி படத்தில் சூர்யா தனியாக வசிக்கும் அறை முழுவதும் பச்சை வண்ணம் நிரம்பியிருக்கும். Company ( இந்தி ) படத்தின் துவக்க பாடலான “கல்லாஸ்…” எனும் பாடலில் வண்ணம் பல ஜாலங்களை நிகழ்த்தியிருக்கும். ( இதுவரை காணாதவர்கள் யூ ட்யூப்பில் காணலாம் ) ரொமாண்டிக் மழைக் காட்சிகள் எனில் மெல்லிய நீலம், அல்லது Grey நிறத்தில் இருப்பின் மழைக்கான Mood உருவாகும்.

231794

அதே மழையில் சண்டைக்காட்சிகளைக் காண்பிக்கும்போது மஞ்சள் – சிவப்பு போன்ற Warm tone இருந்தால் வன்மத்தை இன்னும் கூடுதலாக்கும். பாடல் காட்சிகள் எனில் டூயட், குத்துப் பாடல், சோக பாடல் என ஒவ்வொன்றும் வேறு வேறு வண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதுபெற்ற “ The Revnant “ திரைப்படம் படம் பிடிக்கப்பட்ட இடங்களும், அந்த இடங்களுக்கேற்ப கலர் கரெக்‌ஷன் செய்யப்பட்ட விதமும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன! இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்… படத்தின் வகையறா ( Genre ), காட்சிகளின் தன்மை ( mood ) போன்றவையே கலர் கரெக்‌ஷன் செய்யும்போது அதன் look & tone –ஐ தீர்மானிக்கின்றன. ஃபிலிம் இருந்த காலகட்டங்களில் யதார்த்ததில் இருந்து விலகிய tone வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. ஆனால் இப்போதோ டிஜிட்டலில் எதை வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். Expand the limits என்பதே நவீன டிஜிட்டல் உலகின் சித்தாந்தம். இருப்பினும் நடிகர்களின் Skin tone, படம் பிடித்த இடங்கள், அரங்கில் உள்ள பொருட்கள், அவற்றின் வண்ணங்களைப் பொறுத்தே நாம் வைக்கும் tone –ம் அழகு பெறும்.

நம் ஊரின் பொட்டல் காடுகளில் எடுத்த காட்சிகளை காஷ்மீரின் பனி மலைகள் போல Cool look –இல் மாற்றினால் அதில் துளியளவும் லாஜிக் இருக்காது! உதாரணத்திற்கு பர்ஃபி படத்தின் வண்ணங்களைப் போல பருத்திவீரனும், பருத்திவீரனைப் போல பர்ஃபியும் கலர் கரெக்‌ஷன் செய்யப்பட்டிருந்தால் நம்மால் எந்த அளவுக்கு ரசிக்க முடிந்திருக்கும்? டிஜிட்டல் மயமானதால் படத்தின் Final version திரைக்குச் செல்லும் வரை பல்வேறு tone –களை செய்துபார்த்து இறுதி முடிவெடுக்க முடியும். படம் வெளியான பின்பும் கூட வண்ணங்களை மிகச் சுலபமாக மாற்றி அமைத்து திரை அரங்குகளில் update செய்ய முடியும். ( மாஸ்டரிங் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும்! ) ஒரு படத்தின் கலர் கரெக்‌ஷன் பணிகள் முடிய 10 முதல் 15 நாட்கள் வரை ஆகும். சில சமயங்களில் படத்தின் பட்ஜெட், காட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதலாகவும் கால அவகாசம் தேவைப்படும். கேமராமேனும், கலரிஸ்டும் ஒத்த அலைவரிசையில் இருந்தால் மட்டுமே படத்துடன் ஒன்றிப் பணியாற்றி தரமான Output வெளிவர ஏதுவாக இருக்கும். இயக்குநரின் கண்கள் ஒளிப்பதிவாளர் எனில், ஒளிப்பதிவாளரின் கண்ணாடி கலரிஸ்ட்! அடுத்து நீங்கள் பார்க்கவிருக்கும் படங்களை அதன் Mood –உடன் உங்களையும் இணைத்துக்கொள்ள கேமராமேனும், கலரிஸ்டும் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள் என்பதைக் கணிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.

Comments

comments