NTLRG_160329141732000000

2016ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து ஒரு வாரத்திற்கு ஐந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று மாதங்களில் 13 வெள்ளிக் கிழமைகளில் சுமார் 51 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 51 படங்களில் மூன்று படங்கள் மட்டும்தான் எல்லா விதங்களிலும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் எஞ்சியுள்ள 9 மாதங்களில் இன்னும் 150 படங்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகம்.

ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறைக் காலம் என்பதாலும், தமிழ்ப் புத்தாண்டு, மே தினம் உள்ளிட்ட சிறப்பு நாட்கள் வருவதாலும் பொதுவாக இந்த இரண்டு மாதங்களிலும் அதிகமான படங்கள் வருவது வழக்கம். இன்றைய நிலவரப்படி ஏப்ரல் 1ம் தேதி 7 படங்கள் வரை வெளிவரும் சூழ்நிலையில் உள்ளன.

“ஹலோ நான் பேய் பேசுறேன், ஓய், டார்லிங் 2, நாரதன், உயிரே உயிரே, ஒரு மெல்லிய கோடு, என்னுள் ஆயிரம்’ ஆகிய 7 படங்கள் 1ம் தேதி வருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் எப்படியும் ஒன்றிரண்டு படங்களாவது தள்ளிப் போக வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள். இந்த ஏழு படங்களுமே மினிமம் பட்ஜெட் படங்கள்தான். வெளிவரும் படங்கள் கூட ஒன்றிரண்டு நாட்களாவது தாக்குப் பிடிக்குமா என்பது தெரியாமல் வினியோகஸ்தர்களும் இந்தப் படங்களை வாங்க பெரிதாக முன் வரவில்லை என்கிறார்கள்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் மினிமம் பட்ஜெட் படங்களே வராத சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் அதிகம் என அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.

 

Comments

comments