தமிழின் முதல் ஸோம்பி படம் மிருதன். ஏதோ வைரஸால் தாக்கப்பட்டு மனிதர்களெல்லாம் ஸோம்பிக்களாக மாறி நாசம் செய்கிறார்கள் என்பது போன்று அமைக்கப்பட்ட கதை. காலம் காலமாக இதேபோல பல ஹாலிவுட் ஸோம்பி படங்களும் வந்து கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. நிஜமாகவே ஸோம்பிக்கள் அத்தனைக் கொடூரமானவையா? உண்மையாகவே ஸோம்பி என்ற ஒன்று இருக்கின்றதா? அல்லது கட்டுக்கதையா?

miruthan 2

சற்றே விரிவாகப் பார்த்துவிடலாம்.

ஒரு மனிதனை இறந்த நிலைக்குக் கொண்டு சென்று, மீண்டும் அவனை உயிரோடு ஆனால் ஓர் அடிமைபோல மாற்றி வேலை வாங்கும் ஆப்பிரிக்க மந்திரக் கலையை ‘வூடு’ (Voodoo) என்று அழைக்கிறார்கள். அந்த மந்திரக் கலைக்குள் சிக்கி, ஓர் அடிமையாக, நடைபிணமாகத் திரியும் மனிதர்களைத்தான் ‘ஸோம்பி’ என்கிறார்கள்.

உயிருடன் இருக்கும் ஒரு மனிதனைக் கொல்லாமல் கொல்லலாம். பேச்சு, மூச்சு, இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு எதுவுமின்றி அவனை ஜடமாக மாற்றலாம். அவனைப் பரிசோதிக்கும் மருத்துவர், கண்ணாடியைக் கழற்றியபடியே வருத்தப்பட்டு ‘ஆள் காலி’ என்று அறிவிப்பார். அந்த மனிதனைப் பிணமாக எண்ணி, உறவினர்கள் புதைப்பர். பின் அவனைக் கொல்லாமல் கொன்ற சதிகாரர்கள் வந்து உடலைத் தோண்டி எடுத்து, ‘மாய மருந்து’ கொடுத்து உயிர் நிலைக்கு மீட்டு வருவர். ஆள்தான் உயிரோடு வருவானே தவிர, அவனுக்கு நினைவுகள் எல்லாம் மறந்து போயிருக்கும். எங்கோ, யாரிடமோ அடிமையாக சொன்ன வேலைகளைச் செய்யும் நடைபிணமாக ‘வாழ’ ஆரம்பிப்பான். அந்த நடைபிண மனிதர்களுக்குப் பெயர்தான் ‘ஸோம்பி.’


வறுமைக்கு வாக்கப்பட்ட தேசமான ஹைதியில், இம்மாதிரி ஸோம்பிக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் அடிமைகளாக விற்கப்படுவது சகஜம். கூலியே கொடுக்க வேண்டாம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ‘மாய மருந்து’, பசியையும் மறக்கடித்துவிடும். எப்போதாவது சாப்பாடு கொடுத்தால் போதும். மிகக் கடினமாக உழைப்பார்கள் என்பதால் சில பண்ணையார்கள் தம் தோட்டத்தில் இம்மாதிரியான ஸோம்பிக்களை நூற்றுக்கணக்கில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற கருத்து காலம் காலமாகச் சொல்லப்படுவது.

அமெரிக்க ஆராய்ச்சியளாரான வேட் டேவிஸ் ஹைதி ஸோம்பிக்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கென்றே 1982-ம் ஆண்டு அங்கு சென்றார், சில ஆண்டுகள் தங்கியிருந்தார். பல ஸோம்பிக்களைச் சந்தித்தார். இத்தனைப் பாதிப்புகளும் நிகழ்வதற்குக் காரணமாக வேட் டேவிஸ் சொல்வது, ‘ஸோம்பி பவுடர்’ என்ற மாய மருந்தைத்தான். வூடு மந்திரவாதிகளிடமிருந்தும், ஹைதியின் வேறு பகுதிகளிலிருந்தும் விதவிதமான ‘ஸோம்பி பவுடரைச்’ சேகரித்த டேவிஸ், அவற்றில் என்னென்ன கலந்திருக்கின்றன என்று சோதனை செய்து, அதனை மூன்று வகையாகப் பிரித்தார்.

முதலாவது ‘பஃபர்’ என்ற விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து. இரண்டாவது ஒரு வகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து. மூன்றாவது இறந்த மனிதனின் எலும்புகளிலிருந்தும் பிற கழிவுகளிலிருந்து உருவாக்கப்படும் மருந்து. இந்த மூன்று வகையிலும் வேறு சில விஷத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்ற பல பொருள்களும் கலந்துள்ளன.

ஸோம்பி பவுடர் வகையில் டேவிஸ் முன்னிலைப்படுத்துவது பஃபர் மீனிலிருந்து தயாரிக்கப்படும் மருந்தைத்தான். அந்த மீன் ‘டெட்ரோடோடாக்ஸின்’ என்ற கொடிய விஷத்தைக் கொண்டது. அந்த விஷம் மனிதனின் ரத்தத்தில் கலந்தால், ரத்த வாந்தியிலிருந்து நுரையீரல் பாதிப்பு வரை அனைத்தும் நிகழும். நாடித் துடிப்பு எல்லாம் குறைந்து, ‘இறந்த நிலை’க்குக் கொண்டு சென்றுவிடும். ஆனால், அந்த நபரால் சுற்றி நிகழ்வதை உணர முடியும். வினையோ, எதிர்வினையும் புரிய முடியாது.

1985-ம் ஆண்டு வேட் டேவிஸ் வெளியிட்ட புத்தகமும் (The Serpent and the Rainbow), அதன்பின் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகளுமே, ஸோம்பிக்கள் குறித்த தெளிவை உலகத்துக்கு உருவாக்கின.
ஆண்கள் மட்டும்தான் ஸோம்பிக்களாக மாற்றப்படுகிறார்களா? அடிமையாக விற்கப்படுவதற்காக மட்டுமே ஸோம்பிக்கள் உருவாக்கப்படுகிறார்களா? இரண்டு கேள்விகளுக்கும் பதில்..

‘இல்லை.’

பெண் ஸோம்பிக்களும் உண்டு. பழி வாங்குவதற்காக, உடல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள, வேறு பல    காரணங்களுக்காகவும் ஸோம்பிக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண், பெண் ஸோம்பிக்கள் தவிர, பலரும் அஞ்சி நடுங்கும் இன்னொரு ரக ஸோம்பிக்களும் உண்டு. அவற்றை நீங்கள் ஆங்கில நாவல்களில் சந்தித்திருக்கலாம். ஹாலிவுட் படங்களில், வீடியோ கேம்களில் தரிசித்திருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் சொன்ன பேய்க் கதைகளில் உணர்ந்திருக்கலாம்.
அவை அருவருப்பான தோற்றம் கொண்டவை. அளவில்லா வலிமையுடையவை. பழி வாங்கும் குணம் கொண்டவை. நாக்கைச் சுழட்டியபடி நர மாமிசத்துக்காக அலைபவை. குரல்வளையைக் கடித்து, மனித ரத்தத்தைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும் காட்டேரி வகையைச் சேர்ந்தவை. அவற்றை அழிப்பது அத்தனைச் சுலபமல்ல. ஹிட்லர்கூட அப்படித்தான் எண்ணினார்போல.

 

 

ஹிட்லர், ‘The Brotherhood of Death’ என்ற பெயரில் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் அடங்கிய ரகசியக் குழு ஒன்றை அமைத்திருந்தார். 1935-ம் ஆண்டு அதில் சுமார் நாற்பது கைதேர்ந்த மந்திரவாதிகள் இருந்தனர். நூற்றுக்கணக்கனோர் அதில் பயிற்சி நிலையிலும் இருந்தனர். அந்த மந்திரவாதிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான நாஸி ஸோம்பிக்களை உருவாக்குவதே ஹிட்லரின் எண்ணம். எதையும் சாதிக்கும் வல்லமை வாய்ந்த, தோற்கடிக்கவே முடியாத, தேவைப்பட்டால் தற்கொலைப் படையாக மாறி பெரும் சேதாரத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்ட நாஸி ஸோம்பி வீரர்கள் அடங்கிய ‘சூப்பர் ஆர்மி’ அமைப்பதே ஹிட்லரின் கனவு.
அப்படி ஒரு படையை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் முழுமையாகவில்லை. ஹிட்லர் அதுபோன்ற சூப்பர் ஆர்மியை உருவாக்கியிருந்தால் இரண்டாம் உலகப் போரின் வரலாறும் உலகின் தலையெழுத்தும் மாறியிருக்கும் என்கிறார்கள் சில வரலாற்றாளர்கள். இதற்கான முறையான ஆதாரங்கள் இல்லை அல்லது வெளிவரவில்லை.


தமிழில் மிருதன் முதல் ஸோம்பி படம் எனச் சொல்லப் படுகிறது. ஹாலிவுட்டின் முதல் ஸோம்பி படம், 1932-ம் ஆண்டு வெளியான White Zombie. அதற்குப் பின் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்துவிட்டன. 2009-ம் ஆண்டு நாஸி ஸோம்பிக்களை வைத்து Dead Snow என்ற நார்வே மொழிப் படம் வெளிவந்தது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். திரைப்படங்களும் நாவல்களும் வீடியோ கேம்களும் சித்தரிக்கும் கொடூர ஸோம்பிக்களுக்கும், நிஜமாகவே ஸோம்பிக்களாகப்படும் பாவப்பட்ட ஹைதி மனிதர்களுக்கும் சம்பந்தமே இல்லை.

Comments

comments