ascar-bank-notice-740x431

அன்னியன், தசாவதாரம், ஐ என மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்ததன் மூலம் தமிழில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் படநிறுவனம் கடந்த வருடத்திலிருந்து மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது!

திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிசந்திரன், ‘வானத்தைப்போல’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகி, முன்னணி நட்சத்திரங்களை… இயக்குநர்களை வைத்து தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார்.

சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதாரம், ஐ போன்ற படங்களை கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி மெகா பட்ஜெட்டில் தயாரித்தார்.

அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

இப்படியாக அகலக்கால் வைத்தது ஆஸ்கார் ரவிக்கு தற்போது ஆபத்தாக மாறிவிட்டது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்புவரை சாதாரண விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிக்கு இத்தனை கோடிகள் எங்கிருந்து வந்தது?

இந்தக் கேள்வியை திரையுலகில் கேட்காத ஆளே இல்லை.

திமுக ஆட்சியில் இருந்தபோது… சன் டிவியின் பினாமிதான் ஆஸ்கார் ரவி என்று சொல்லப்பட்டது.

அதிமுக ஆட்சி மாறியதும்…சசிகலாவின் பினாமி என்றனர்.

இந்த வதந்திகளை மறுக்காமல், தன்னை ஆளும்கட்சியின் பினாமி என்று சொல்லப்படுவதை ரசித்தார் ஆஸ்கார் ரவி.

உண்மையில், ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில் பல கோடி கடன்களை வாங்கித்தான் மெகா பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்திருக்கிறார்.

குறிப்பாக ஐ.ஓ.பி. வங்கியில் மட்டுமே சுமார் 84 கோடிக்கு மேல் கடன் வாங்கினார்.

வாங்கிய கடனை குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆஸ்கார் ரவியோ வாங்கிய கடனை அடைக்காமலே காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.

இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ascar-ravi-noticefinal

ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்தது ஐஓபி வங்கி.

இது குறித்த சொத்து சுவாதீன அறிவிப்பை அப்போது பல முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டது ஐஓபி வங்கி.

இந்நிலையில், வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் ஆகிய மூன்று தியேட்டர்களை வரும் மார்ச் 7 ஆம் தேதி அன்று ஏலம்விட நாள் குறித்துள்ளது ஐ.ஓ.பி. வங்கி.

குறைந்தபட்ச ஏலத்தொகையாக 31 கோடியே 55 லட்ச ரூபாயை நிர்ணயித்துள்ளது.

இது பற்றிய வங்கியின் அறிவிப்பு வாட்அப்பில் பரவி வருகிறது.

Comments

comments