0

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு:

நீங்கள் நடித்துள்ள, நையப்புடை படம் பற்றி சொல்லுங்களேன்?

கிராமத்தில் வசிக்கும் முரட்டு இளைஞன், ராணுவத்தில் சேருகிறான். ஓய்வுக்கு பின், தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். அங்கு, அவனுக்கு சொந்தம்ன்னு யாரும் இல்லை. இதனால், சென்னைக்கு வருகிறான். நல்ல வசதியுடன் இருக்கும் அவன், எங்கு வேண்டுமானாலும் போய் வசிக்கலாம். ஆனால், ஒரு குடிசைப் பகுதியில் குடியேறுகிறான். அங்குள்ள குழந்தைகளுடன் தங்குகிறான். இந்த சூழ்நிலையில், அந்த குடிசைப் பகுதியில் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதை, எப்படி, சமாளிக்கிறான் என்பது தான், படத்தின் கதை.

படத்தில், சண்டை எல்லாம் பயங்கரமா போட்டுருக்கீங்க போல; 73 வயதில், இது தேவைதானா?

படத்தில் சண்டை காட்சி இருக்கு என, முன்கூட்டியே தெரிந்திருந்தால், இதில் நடித்திருக்க மாட்டேன். இயக்குனர், என்னிடம் கதை சொல்லும்போது, ‘இது, சமுதாய பிரச்னையை சொல்லும் கதை. அதில், கொஞ்சம் சண்டையும் இருக்கு’ என்று மேலோட்டமாகத் தான் கூறினார். நடிக்க வந்தபின் தான், கயிறு கட்டி தொங்கும் அளவுக்கு சண்டை காட்சி இருப்பது தெரிந்தது. புது இயக்குனர் கொடுத்த தெம்பில், நடித்து முடித்து விட்டேன். டூப் போடாமல் நடித்திருக்கேன்.

முழு நேர நடிகராகிட்டீங்க; உங்கள் மகன் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் எண்ணம் உண்டா?

இப்போது தான், சில படங்களில் நடிக்க துவங்கியிருக்கேன். விஜய் கூப்பிட்டால், முடியாது என சொல்ல முடியுமா; கண்டிப்பாக நடிப்பேன். முதலில், இந்த படம், நன்றாக ஓடட்டும். மற்றதை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். காசுக்காக நடிக்க வேண்டும் என்ற நிலையில், கடவுள் என்னை வைக்கவில்லை. அதனால், எல்லா படங்களிலும் நடிக்க மாட்டேன். மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லும் படமாக இருந்தால், கண்டிப்பாக நடிப்பேன்.

விஜய், அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஒரு தந்தையாக உங்கள் ஐடியா என்ன?

என்னை இப்படி மாட்டி விடுறீங்களே; நியாயம் தானா? விஜயிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கலாமா? என்னுடைய தனிப்பட்ட கருத்தை வேண்டுமானால் சொல்லலாம். காசு வாங்கி விட்டு, ஓட்டுப் போடும் மக்களின் மனநிலை மாறினால், அரசியலுக்கு வரலாம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஓட்டு என்பது, மிகப் பெரிய ஆயுதம். அதை, காசுக்கு விற்பது நியாயமல்ல.

இளம் வயதில் பட்ட கஷ்டத்தை நினைத்து பார்ப்பது உண்டா?

ராமநாதபுரம் தான் என் சொந்த ஊர். அம்மா, டீச்சர். இளம் வயதிலேயே சினிமா ஆசை வந்து விட்டது. அதனால், பி.யு.சி., முடித்த கையுடன், சென்னைக்கு வந்து விட்டேன். கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்த நாட்கள் அவை. ஒவ்வொரு ஸ்டூடியோவாக ஏறி, இறங்குவேன். போராடித் தான், வெற்றி பெற்றேன். அந்த நாட்களை மறக்க முடியாது.

சினிமாவை விடுங்க; தனிப்பட்ட உங்கள் ஆசைகள் நிறைவேறியதா?

நடைபாதையில் கிடந்தவன்; இன்று, பங்களா வீட்டில் வசிக்கிறேன் என்றால், என் ஆசை நிறைவேறி இருக்கிறது என்று தானே அர்த்தம். விஜயிடம் பிடித்த விஷயம்; அவர், மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் விஷயம்? இரண்டுமே, பிடிவாதம் தான். அவர் நண்பர்களிடம் கூட, அதிகம் பேசி, நான் பார்த்தது இல்லை. மற்றவர்களை பேசச் சொல்லி, அவர் கேட்பார். அது, அவருடைய கேரக்டர்.

 

Comments

comments