001

நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை பார்த்ததால், இந்த முறை திருவிழா கோலம்தான் என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தில் கல் விழுந்தது சிறிது நேரத்திலேயே! இதில் காப்புரிமை பிரச்சனை இருப்பதாக கூறி, யூ ட்யூப் தளம் அந்த வீடியோவை உடனே நீக்கிவிட்டது. இதனால், ‘கண்ணுக்கு எட்டியது, கருத்துக்கு எட்டலையே?’ என்று கவலையால் தவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

வெகு காலமாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் ஒருவர் சட்டையை மற்றவர் பிடித்துக் கொண்டு இழுபறி நடத்திக் கொண்டிருப்பதால், இந்த காப்புரிமை பிரச்சனை அஜீத் ரசிகர்களால் எறியப்பட்ட கல்லா? அல்லது வேறு ஏதாவது சதியா? என்ற கோணத்தில் தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் அட்லீயும் களத்தில் இறங்க… இந்த நிமிஷம் வரை உருப்படியாக ஒரு க்ளுவும் கிடைக்கவில்லையாம் அவர்களுக்கு.

இதற்கிடையில் இவ்விரு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டது இன்டஸ்ட்ரியை மேலும் திகைக்க வைத்தது. உதயநிதி போன்ற இரு ஹீரோக்களின் அபிமானிகள் “அடிச்சுக்காதீங்கப்பா…” என்று கெஞ்சியும் கூட்டத்தில் சிக்கிய வாழைப்பழம் போலதான் ஆனது அவரது நிலைமை. தெறி படத்தின் டைரக்டர் அட்லீக்கு அஜீத்திடம் நேரடி பழக்கம் இருந்தாலும், அது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் “இந்த வேலையை செய்தது அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும்” என்று சில இடங்களில் வாயை விட்டதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அஜீத் பெயரில் சமூக வலைதளங்களில் செயல்படும் தீவிர அபிமானிகளின் செயல்பாடுகளை கண்டறிய தொழில் நுட்ப வல்லுனர்களின் உதவியை நாடியிருக்கிறாராம் அவர்.

“எவ்வளவு செலவானாலும் பரவால்ல தம்பி. தப்பு செஞ்சவங்களை விடக் கூடாது” என்று தயாரிப்பாளர் தாணுவும் கூறி வருவதால், இந்த சண்டை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!

Comments

comments