001

‘தெறி’ படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் யு டியூபில் வெளியாக உள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது.

‘புலி’ என்ற மாபெரும் தோல்விப் படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வெளிவர உள்ள படம் என்பதால்தான் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு. ‘புலி’ படத்தின் டீசர், டிரைலர், படம் ஏன், புகைப்படம் வந்தால் கூட உடனே ‘மீம்’ தயார் செய்து வெளியிட்ட மீம் கிரியேட்டர்கள் தற்போது ‘தெறி’ படத்தின் டீசருக்காக காத்திருக்கிறார்களாம்.

நள்ளிரவு 12 மணிக்கு அந்த டீசர் வெளிவந்த உடனேயே அவர்கள் தங்களது ‘க்ரியேட்டிவ்’ வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக அந்த மீம்ஸ் க்ரியேட்டர்கள் தெரிவிக்கிறார்கள். ‘தெறி’ படத்தின் தலைப்பைப் போலவே தெறிக்க விடப் போவதாகச் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் அஜித் ரசிகர்களின் பயன்பாடுதான் அதிகமாக உள்ளது. அதனால்தான் ‘வேதாளம்’ டீசரை இந்திய அளவில் அவர்கள் சாதனைப் பட்டியலில் இடம் பெற வைத்தார்கள்.

அது போலவே ‘தெறி’ டிசரையும் சாதனைப் பட்டியலில் இடம் பெற வைக்க விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஜெயிக்கப் போவது விஜய் ரசிகர்களா, அல்லது மீம்ஸ் க்ரியேட்டர்களா என்பது இன்று நள்ளிரவு முதல் தெரிய வரும். எதற்கும் நாளை காலையில் பலமான மோதல்களை சமூக வலைத்தளங்களில் எதிர்பார்க்கலாம்.

 

Comments

comments