NTLRG_160224110633000000

தி.மு.க., வெளியிட்ட விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… என்ற வார்த்தைகளுக்கு உரிமையாளரான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நியாயத்தின் குரலாக என் வார்த்தைகள் நிற்பதில், எனக்கு மகிழ்ச்சி தான், என, தெரிவித்துள்ளார்.

தனியார், டிவி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நியாயமில்லாமல் நடந்து கொள்கிறவர்களை பார்த்து, என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… எனக் கேட்பார். இதை வைத்து, மற்றொரு தனியார், டிவி சேனல் நிகழ்ச்சியில், லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டலாக விமர்சித்தனர். இதற்கு எதிராக, லட்சுமி ராமகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நியாயம் கேட்டார். பிரச்னை இத்துடன் முடியவில்லை. ரஜினி முருகன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என, பாடலே பாடினார். இதுவும், லட்சுமி ராமகிருஷ்ணனை கோபப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது, அரசியல் ரீதியாக, அந்த வார்த்தைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தரப்பில், தமிழகத்தின் அனைத்து பிரதான நாளிதழ்களிலும், நேற்று, முதல் பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில், 5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கரில் பார்த்திருப்பீங்க… பேனரில் பார்த்திருப்பீங்க… ஏன், டிவியில பார்த்திருப்பீங்க… நேர்ல பார்த்திருக்கீங்களா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த விளம்பரத்துக்கு, தி.மு.க.,வினர் மற்றும் எதிர்க்கட்சியினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இது குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: இந்த வார்த்தைகள் என்னுடையது தான் என்பதில், யாருக்கும் சந்தேகம் கிடையாது. நியாயத்தின் வார்த்தைகளாக, தன்னெழுச்சியாக, என்னிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகளை வைத்து, கிண்டல் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், நீதிமன்றத்தின் உதவியை நாடியதோடு, நியாயம் கேட்டும் புறப்பட்டேன். மற்றபடி, இந்த வார்த்தைகளுக்காக நான் எங்கும், யாரிடமும் சொந்தம் கொண்டாடவில்லை. அந்த நிகழ்ச்சி மூலமாகவும், என் அணுகு முறையாலும், அறுந்த கிடந்த எத்தனையோ உறவுகள் இணைந்து இருக்கின்றன. அப்படியொரு மந்திரச் சொல் தான் அந்த வார்த்தை.

அந்த வார்த்தைக்கு எத்தனை வீரியம் உண்டு என்பதை, அதை உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். அதன்பின், சினிமாவில் அந்த வார்த்தைகளை வைத்து, பாடல் கூட பாடி விட்டனர். அதில் என்னை சம்பந்தப்படுத்தி எதுவும் இல்லை என்றாலும் கூட, கிண்டலுக்காகவும், கேலிக்காகவும் அந்த வார்த்தையை பாடலாக பயன்படுத்தியதில், என் மனசுக்கு கஷ்டமாக தான் இருந்தது.

இதன் அடுத்த கட்டமாக, இப்போது, அந்த வார்த்தைகள் அரசியலாகி இருக்கின்றன. நான் எந்த கட்சியையும் சாராதவள். யாருக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை.

ஆனால், என் வார்த்தைகள் நியாயத்தின் குரலாக ஒலிக்கும் என்றால், அதற்காக நான் சந்தோஷம் தான் படுவேன். அதற்காக, நான் இந்த கட்சிக்கு ஆதரவானவர்; அந்த கட்சிக்கு எதிரானவர் என, யாரும் அரசியல் சாயம் பூச தேவையில்லை. இந்த வார்த்தைகளை, நியாயத்தின் வார்த்தைகளாக, வேறு யாரும் பயன்படுத்தினாலும், அதையும் நான் வரவேற்கவே செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments

comments