இன்றைய தமிழ்த் திரையுலகம், ஒவ்வொரு வாரக் கடைசியிலும் புது ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், இசையமைப்பாளர் எனப்பல புதுமுகங்களை அறிமுகப் படுத்துகிறது. அப்படி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், புது முகமாக வந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண். அட்டகத்திக்கு முன்னால், “உயிர்மொழி” தான் அவரது முதல் படம் என்பது இங்கு உங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?

001

அவருடைய காந்த இசை விரைவில் அனைவருக்கும் பிடித்துப் போவதற்கான காரணங்கள். இதோ !

இன்றைய இசையமைப்பாளர்களில் பெரும்பாலானோரின் இசையில், வாத்தியங்களின் சப்தமே பெரும் அளவு இடம் பெறுகிறது. அதுவும் ரெக்கார்ட் செய்த இசை என்றால் பரவாயில்லை. ஆனால், சின்தசைஸர் ஓசைகளை பயன் படுத்தும் போது, அது வெகு விரைவில் நம் முணுமுணுப்பில் இருந்தும், ப்ளே-லிஸ்ட்டில் இருந்தும் காணாமல்போய் விடுகிறது.

அக்வஸ்டிக் இசை இவருடைய பாடல்களில் தலை நிமிர்த்தி நிற்கும். எலெக்ட்ரிக் ஆம்ப்ளிபிகேஷனின் பயன்பாடு பெரிதளவு இல்லாததால், அவை கேட்க மிகவும் “லைவ்லி”யாக இருக்கும்.

அப்படியே இவர் சின்த் பயன்படுத்தினாலும், அது சற்றே வித்தயாசமான விதத்தில் அமைகிறது. பிட்சா படத்தின் “எங்கோ ஓடுகின்றாய்..”, எனக்குள் ஒருவனில் “பிரபலமாகவே..” போன்ற பாடல்களே இதற்கு ஆதாரம்.

“கானா கலாச்சார”த்தை மீண்டும் வழக்கமுறைக்கு கொண்டு வந்தது இவரே என்று சொல்லலாம். அட்டகத்தியில் “ஆடி போனா ஆவணியிலிருந்து, மெட்ராஸ் படத்தில் “இறந்திடவா நீ பிறந்தாய்..” என எல்லா மூடுகளுக்கும் ஒரு கானாவைக் கொடுத்துவிட்டார்.

சந்தோஷுடைய மிகப் பெரிய பலம் என்றால், அது அவருடைய பேண்டு மற்றும் அவர் பாடவைக்கும் பாடகர்கள் என்று சொல்லலாம். ப்ரதீப், ஷான் ரால்டன் (எ) ராகவேந்தரா, கல்யாணி நாயர், அந்தோணி தாசன், கானா பாலா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. தமிழ் சினிமா கேட்டிடாத ஒரு புதிதொரு மயக்கும் ஆண் குரலாக “ஆசை ஒரு புல்வெளி” ப்ரதீப்பின் குரல் அமைந்தது. சமீபத்தில் வந்து ஹிட் அடித்த இறுதிச்சுற்றின் “வா மச்சானே” பாடல் ஷான் ரால்டன் பாடியது.

தற்போதைய தமிழ் இசை அமைப்பாளர்களில், “கானா பாடல்” பாட மட்டுமே தன் குரலைப் பயன் படுத்திக் கொள்ளும், ஒரே ஆள் சந்தோஷே ஆவார்.

santhos-2

இவர் இசையமைத்ததில் முக்கால்வாசிப் படங்கள், “சிறிய பட்ஜெட்” ரகங்களே. பிட்சா, அட்டகத்தி, சூதுகவ்வும், குக்கூ, என புதுமுக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரிலீஸுக்கு முன்னரே படத்தின் பாதி வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டு விடுகிறார். இப்போது, ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசைஅமைக்கிறார்.

ஆங்காங்கே இசைஞானி இளையராஜா இசையின் லேசான சாயல்கள் இவரது மெலடிகளிலும் தென்படுவது, இன்றைய இசைப் பிரியர்களுக்கு, இவர் மேல் மேலும் கவனத்தைத் திருப்புகிறது.

பேக்-ரவுண்ட் ஸ்கோர் மற்றும் ரீ-ரெக்கார்டிங்கில் இவரது இசையே கதை சொல்லும். மெட்ராஸ் படத்தின் “சுவர் தீம்” மியூசிக்காக இருக்கட்டும், ஜிகர்தண்டா படத்தின் “தண்டா தீம்”ஆக இருக்கட்டும். ஒரு சீனை அப்படியே வேற லெவலுக்குத் தூக்கிச் செல்லும் ஆற்றல் மிக்கவை.

மேடைகளில் அதிகம் பேசாமலும், கான்சர்ட்டுகள் எதுவும் நடத்தாமலும், மீடியா வெளிச்சத்தில் இருந்து சற்றே விலகியும் வேலை செய்யும் இவரது பாணி, மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டது.

Comments

comments