0 (1)

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி வைத்ததோடு திரைக்கதை, வசனங்களை மீண்டும் பட்டி பார்க்க சொல்லியிருந்தார். தனுஷும் இன்னும் சில அனுபவசாலிகளும் இணைந்து ஒரு வழியாக அப்படத்தின் திரைக்கதையை செப்பனிட்டு விட்டார்கள். ஆனால் வசனத்தை படித்த தனுஷ்தான் பயங்கர ஷாக் ஆகிவிட்டாராம்.

ஏனென்றால் படத்தில் வரும் இரண்டு தனுஷ்களில் ஒருவர் அரசியல்வாதி. அதை சாக்காக வைத்துக் கொண்டு நிகழ்கால அரசியலை புட்டு புட்டு வைத்துவிட்டாராம் டைரக்டர் துரை செந்தில்குமார். யார் பொல்லாப்பும் நமக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கும் தனுஷ், “வசனத்துல அநியாயத்துக்கு அனல் அடிக்குது. கொஞ்சம் தண்ணி ஊற்றி அணைக்கிறீங்களா?” என்று உத்தரவிட, மீண்டும் வசனங்களில் கை வைத்து ஈயம் பூசிக் கொண்டிருக்கிறார் துரை.

இப்படத்தின் கதை லேசாக லீக் ஆகியிருக்கிறது. சொல்லலாமா? அதாவது அந்த அரசியல்வாதி இருக்கிறார் அல்லவா? அவரை ஒரு கும்பல் கொலை செய்துவிடும். அந்த நேரத்தில் அதை கவனித்துவிடும் மற்றொரு தனுஷ், தானே அந்த அரசியல்வாதி போல வேஷம் போட்டுக் கொண்டு, அந்த அரசியல்வாதியின் கனவுகளை நிறைவேற்றுவாராம். இறுதியில் நான் அவனில்லை என்று சொல்லி சுபம் போடுவார்கள் போலிருக்கிறது.

இன்னும் சில தினங்களில் சென்னையில் துவங்கப்படவிருக்கும் இப்படத்திற்காக பிரமாண்டான கால் பந்தாட்ட கிரவுண்ட் ஒன்றை மாதக் கணக்கில் வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை முழு படத்துல முக்கா படம் அங்கேயே நடக்குதோ என்னவோ?

Comments

comments