0 (1)

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும் இந்த விழாவுக்குதான் முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியது தயாரிப்பாளர் சங்கம். காரணம், விஜய் தொலைக்காட்சிக்கும் சங்கத்திற்கும் இடையே வெகுகாலமாக நடந்து வரும் குத்தல் குடைச்சல்தான்.

ஆனால் ‘இளையராஜா தமிழ் திரையுலகத்தின் சொத்து, காலம் தமிழ் நாட்டுக்கு அருளிய கொடை’ என்பதையெல்லாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் சங்கம் முழு மூச்சாக விஜய் தொலைக்காட்சியை கண்டிக்க முடியாத நெருக்கடிக்கு ஆளானது. இருந்தாலும், இது தொடர்பாக இளையராஜாவிடம் தொடர்ந்து பேசி வந்தார்கள். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியும் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி சுமூகமான ஒரு நிலைமையை உருவாக்கியது. அதற்கப்புறம் என்ன? பூமாலையே… தோள் சேர வா… என்று ராஜாவின் இசையை ஒலிக்க வைத்துவிட வேண்டியதுதானே?

எல்லா சங்கங்களுக்கும் பறந்தது சர்குலர். அவசியம் இந்த விழாவில் எல்லாரும் கலந்து கொண்டு இளையராஜாவை சிறப்பிக்கணும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை. முதல் கட்டமாக இந்த விழாவுக்காகவே பிரத்யேகமாக ஒரு லோகோவை உருவாக்கியிருக்கிறார்கள். இதை இளையராஜா தன் கைகளால் வெளியிட, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் அவரை அன்னக்கிளி மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம், மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, டி.சிவா, நடிகர் பிரபு உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரமுகர்கள்.

பின்குறிப்பு- ஒரு நிகழ்ச்சியை ஷுட் பண்ணி, ‘கேமிராவும் எடிட் சூட், இன்னபிற ஒளிபரப்பு சாதனங்கள் எல்லாம், வலிக்குது விட்ருங்க’ என்று கெஞ்சுகிற அளவுக்கு ரீ ரீ ரீ ரீ டெலிகாஸ்டுகளை அடித்துத் தள்ளும் தொலைக்காட்சிகளுக்கு இளையராஜா செய்த ஒரு காரியம் பின்னியெடுத்த பிடலெடுப்பு! என்னவாம்? “இந்த இளையராஜா 1000 நிகழ்ச்சியை நீங்க ஒருமுறைதான் டெலிகாஸ்ட் பண்ணலாம். அதற்கப்புறம் இன்னொரு முறை பண்ணணும்னா என் ஒப்புதல் கேட்கணும்” என்பதுதான் அது!

Comments

comments