iru-mugam

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை இயக்கிய திரு, அப்படத்தைத் தொடர்ந்து ‘கருடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கருடா படத்தின் ப்ரீ புரடக்ஷன்ஸ் பணியில் ஈடுபட்டுள்ள இயக்குநர் திரு, ‘கருடா’வின் படப்பிடிப்பை ஜூன் 2வது வாரத்தில் துவங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.

‘ஐ’ படத்திற்காக இரண்டு வருடங்களை ஒதுக்கிய விக்ரம், அதன் பிறகு நடிக்கும் படங்களை குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதற்கு மாறாக, விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படமும் சுமார் ஒன்றரை வருடம் இழுத்துவிட்டது. எனவே இனி நடிக்கும் படங்களை வேகவேகமாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் விக்ரம்.

தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இரு முகன்’ படத்தில் நடித்து வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீளமான சுரங்கப்பாதையை வெடி வைத்து தகர்ப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சுரங்கப்பாதை செட் போடப்பட்டு வருகிறது. அந்த செட்டில் ‘இரு முகன்’ படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மே மாதத்திற்குள் ‘இரு முகன்’ படப்பிடிப்பு வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, அதன்பிறகு ‘கருடா’ படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் விக்ரம்.

 

Comments

comments