0

இன்றைய மாஸ் வசூல் ஹீரோஸ் லிஸ்டில் முக்கிய இடம் சிவகார்த்திகேயனுக்கு. விஜய் டி.வி.யில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தோன்றி, பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தமிழ் ரசிகர்களின்  மனதில் பதிந்த சிவகார்த்திகேயனுக்கு 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான முதல் படம் மெரினா.

டிவியில் பார்த்துப்பழகிய முகம் என்பதால் அறிமுக நடிகர் என்ற இடத்தைத் தாண்டி எல்லோரையும் எளிதில் கவர்ந்தார். தொடர்ந்து மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது.

இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. அடுத்த ஆண்டில் கேடிபில்லாகில்லாடிரங்கா, எதிர்நீச்சல் ஆகிய இரண்டுபடங்களும் வெற்றியடைந்த நிலையில் வெளியான வருத்தப்படாதவாலிபர் சங்கம் மிகப்பெரிய வசூல். இப்படமே சிவகார்த்திகேயனை உச்ச இடத்திற்கு கொண்டு சென்றது.

இவர் நடித்த எல்லாப்படங்களும் வெற்றி என்பதோடு வசூலிலும் சாதனை படைத்துவிட்டதால் அவருடைய சந்தைமதிப்பு பன்மடங்கு எகிறியது.

அந்தநேரத்தில் வெளியான படமே மான்கராத்தே. புதுமுக நாயகிகளுடன் ஜோடி சேர்ந்துவந்த சிவாவிற்கு டாப் நாயகி ஹன்சிகா ஜோடியானார்.  அந்தப் படத்தின் வெற்றியே சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம் என்ற எண்ணத்தை தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவாக்கியது.

அதன்பின் வந்த காக்கிச்சட்டையும் ஓகே. அண்மையில் வந்த ரஜினிமுருகன் அவருடைய முந்தையபடங்களின் வசூலையெல்லாம் தாண்டி சிவாவை ஸ்டார் பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

தவிர, திரைத்துறைக்கு வந்து நான்காண்டுகள் முழுமையடையும் நேரத்தில் அவர் எட்டு வெற்றிப்படங்களின் கதாநாயகன்.

இனி புதுஇயக்குநர் பாக்யராஜ்கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படம், மோகன்ராஜா இயக்கத்தில் ஒருபடம், இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகிய மூன்று படங்களைக் கைவசம்  கெட்டியாக வைத்திருக்கிறார்.

இன்றைய அவரின் பிறந்த நாளுக்கு கூட ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட தளங்களில் இளைஞர்கள் “சிவா அண்ணாவிற்கு வாழ்த்துகள்”  என்று வாழ்த்துகளை குவித்துவருவது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்களைத்தாண்டி டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் தொலைக்காட்சிகளில் இவர் தான் டாப் என்றும் சொல்லப்படுகிறது.

தவிர, இனி வரவிருக்கும் படங்களும் ஹிட் லிஸ்டில் எகிறினால் நிச்சயம் சிவகார்த்திகேயன் – விஜய் மற்றும் அஜித்திற்கே போட்டியாக அமைவார் என்பதே இணைய வாசிகளின் கணிப்பு.

இனி சிவகார்த்திகேயன் எந்த லெவல் என்பது அவரின் அடுத்தடுத்த படங்களே முடிவுசெய்யும்.

Comments

comments