ந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன்.

ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே…

குறிப்பு:  பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது!

மாரி

 

mari_vc1
‘செஞ்சிருவேன் செஞ்சிருவேன்’னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டார் இந்த மாரி. மாமனாரின் ஸ்டைலை காப்பி அடித்தாலும்,  அடிதாங்கியுடனும் சனிக்கிழமையோடும் தனுஷ் செய்யும் ரகளைகள் ஓகே. அவங்களே நல்லா காமெடி பண்ணும்போது  எதற்கு அர்ஜுன் சாரும், ‘பேர்ட்’ ரவியும்.

மாரியில் நம்மை ஏமாற்றியது வில்லன்களின் காஸ்டிங்கும், கதையே இல்லாத ஸ்கிரிப்டும்தான். படத்தில் லாஜிக்கைக் கூட நல்லா செஞ்சுடுச்சு இந்தக் கூட்டணி. முக்கியமா நாம குறிப்பிட வேண்டிய கேரக்டர் – விஜய் யேசுதாஸ். டைட்டில் கார்டிலேயே புறா ரேஸ் பற்றிச் சொன்னார்கள். படத்தில் வரும் ஈகோ பிரச்னையும் அதனால்தான் எழுகிறது. பட், கூண்டுப் புறாவையே காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நாங்களும் முழிச்சிட்டு இருக்கும்போது கொசு அடிப்போம் என்று நிரூபித்து விட்டார்கள் ரசிகர்கள்.

10 எண்றதுக்குள்ள

10NOvc_1

டிரான்ஸ்போர்ட்டர் + ஆதி பகவன் = 10 எண்றதுக்குள்ள. டிரான்ஸ்போர்ட்டர் படத்தில் ஜேசன் ஸ்டேதம் செய்யும் அதே வேலை இங்கு விக்ரமிற்கு. ஆதி பகவனில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் இதில் சமந்தாவுக்கு. இரண்டையும் சேர்த்து மிக்சியில் அடித்து கொஞ்சம் வடக்கத்திய சாதிச் சண்டையைச் சேர்த்தால் படம் ரெடி. என்னென்னவோ மாற்றங்கள் கண்டுவிட்டு,  தானாகவே தன் அழகோடு நடித்துள்ள விக்ரமை மறைக்கின்றன மோசமான கதையும் திரைக்கதையும். பயங்கரமான வில்லனிடம் தொடங்கும் கிரிமினல் நெட்வொர்க்,  காமெடி செய்யும் பசுபதியிடம் முடிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமான கார் சேசிங் காட்சிகள் ஏமாற்ற, ஒரு கோலி சோடா அடித்துவிட்டு இயக்குநர் புதுத் தெம்புடன் வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

உத்தம வில்லன்

anegan_vc1
நியூயார்க்கில் பல விருதுகளை வென்ற படம், சொந்த நாட்டில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு பேர் வாங்காதது சோகம். இந்தியாவின் ஆகச் சிறந்த கலைஞனான கமல் இன்னும் திரைக்கதையில் சொதப்புவதுதான் ஏனென்று தெரியவில்லை. படத்திற்குள் படம் எடுக்கிறார்கள். ‘கலைஞர்களே சாகாவரம் பெற்றவன்’ என்பதனை அவர்கள் எடுக்கும் அந்த காமெடி படம் அழுத்தமாய் சொல்லத் தவறுகிறது. அதே சமயம் கேன்சர் நோயாளியாக வரும் நடிகர் கமல், அவருக்கு நிகர் அவர்தான் என்பதை நிரூபித்து விட்டார்.

கே.பி க்கான குருதட்சணையையும் கொடுத்துவிட்டார். கமல் படத்தில் ஆக்சன், கட் சொல்வது மட்டுமே வேலை என்பதால் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. சில நேரங்களில் அற்புதமான கதைகளை வீக்கான திரைக்கதையுடன் படைக்கிறார் கமல். அதைச் சரி செய்திருந்தால் உண்மையிலேயே வில்லன் வென்றிருப்பான்.

இஞ்சி இடுப்பழகி

Anushka-Inji-Iduppazhagi-Movie

அனுஷ்காவின் மோஸ்ட் வான்டட் மூவி ஆஃப் த இயர். ஆனால் அனுஷ்காவுக்கு அதனால் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. “பொண்ணுங்க குண்டானா கல்யாணம் பண்ண மாட்டீங்க. கல்யாணத்துக்கு அப்பறம் குண்டான டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?” என்று அனுஷ்கா பேசும் ஒரே இடம்,  ரசிகர்களை கைதட்ட வைத்தது. மிக நீண்ட பயணம் போன்ற சலிப்பை உண்டாக்கிய திரைக்கதை. உடல் எடையை கூட்டி குறைக்க அனுஷ்கா மெனக்கெட்டதில், பாதி அளவாவது திரைக்கதையில் மெனெக்கெட்டிருக்க வேண்டும். அதிலும் படத்தில் முக்கால்வாசிப் பேர் தெலுங்கு தேசத்து நடிகர்களாக இருக்க, தமிழ் படம் என்ற உணர்வே ஆர்யாவையும், ஊர்வசியையும் பார்க்கும் போதுதான் ஏற்படுகிறது.  ‘எடை குறைப்பதற்கு குறுக்கு வழிகள் வேண்டாம், குண்டா இருந்தாலும் நாம அழகுதான்’ என்ற மெசேஜை 2 மணி நேரம் எப்படி எப்படியோ சொல்ல முயற்சிக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. அனுஷ்காவின் உழைப்பிற்கு சற்றும் உயிர் சேர்க்கவில்லை இப்படம்!

புலி

vijay vijay fb

என்னை அறிந்தால் சன் மியூசிக்கிற்கு என்றால், புலி சுட்டி டி.வி க்கு. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் என மொத்தக் குழுவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் விஜய் ரசிகர்களே மீம்ஸ் போடும் அளவிற்கு கடுப்பைக் கிளப்பியது புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி… என நீளும் கதையில்,  சிரிப்பு வராத காமெடிகளையும் ஹாலிவுட் தந்த கேரக்டர்களையும் இணைத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவி, கிச்சா சுதீப் போன்ற ஸ்டார் பெர்ஃபார்மர்களின் நடிப்பை அணுவளவும் பயன்படுத்தவில்லை இந்த ஸ்கிரிப்ட். பிரேமுக்கு பிரேம் விஜய்யே வர, வேலையே இல்லாத வேலைக்கு இரண்டு நாயகிகள். பீரியட் மூவிக்கு விஜய்யின் மேனரிசங்கள் பொருந்தவில்லை. படத்தின் முக்கிய அங்கமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸும் சொதப்பல். ஏதோ கல்லூரி விழாவுக்கு பவர் பாயின்ட் பிரசண்டேஷன் பண்ணியது போலவே இருந்தது கிராஃபிக்ஸ் காட்சிகள்.

படம் சொதப்பியதெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஆடியோ விழாவில் பேசிய டி.ஆரின் ” இது அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி…!’ வசனமும்,  இப்படம் கோலிவுட்டின் பாகுபலி என்று கிளப்பப்பட்டதுமே படம் பேரடி வாங்கியதற்கு பிள்ளையார் சுழி போட்டவை!

இசை

isai1

வாலியையும் குஷியையும் எதிர்பார்த்து போன ரசிகன்…. நிறையவே ஏமாந்துதான் போனான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, கதை, திரைக்கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாடர்ன் டி.ஆராகவே மாறி ‘ஐ ஏம் பேக்’ சொல்கிறார். முதல் படத்திற்கு இந்த இசை ஓகே. ஆனால் ஒரு மியூசிக்கல் படத்திற்கு கண்டிப்பாக இது வொர்த் இல்லை. பல வருஷம் தேடிப் புடிச்சு சாவித்திரினு பேரெல்லாம் மாத்தி வச்சு கொண்டாந்த அந்தப்புள்ள..ப்ச்..! நல்ல கதை; திரைக்கதை கூட ஓகே. ஆனால் ஒவ்வொரு சீனும் இழு இழுவென்று இழுப்பதுதான் படத்தை தோல்வியை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டன. சத்யராஜின் கேரக்டர்தான் மாஸ்டர் ஸ்டிரோக். ஆனால் அவர் ஒரு இயக்குநரை கொலை செய்யும் இடத்தில் அத்தனை லாஜிக் ஹோல்ஸ். அதுபோல ஆங்காங்கே உதைக்கும் லாஜிக்கை மறக்கடிக்க கிளைமாக்ஸில் எஸ்.ஜே.சூர்யா கனவிலிருந்து எழுவதெல்லாம் டூ மச்!

மாசு என்கிற மாசிலாமணி

masu_vc1

சினிமா சிரிக்க வைக்கவே என வெங்கட் பிரபுவும், சிந்திக்க வைக்கவே என சமுத்திரக்கனியும் ஒரு தொலைக்காட்சி சிறப்புப் பட்டிமன்றத்தில் போரிட்டார்கள். இவர்கள் இருவரும் இணைந்து எப்படியான படத்தைக் கொடுத்துள்ளார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. எல்லோரும் பேய் படத்தில் காமெடி செய்தால், பேய்களை வைத்தே காமெடி செய்தார்  மங்காத்தா மேன் வெங்கட் பிரபு.  படத்தின் கதையை பல ஹாலிவுட் படங்களோடு கம்பேர் செய்து வறுத்து விட்டார்கள் நெட்டிசன்கள். நயன்தாரா, பார்த்திபன், ரியாஸ் கான் என ஸ்க்ரீனை ரணகளப்படுத்தும் ஆர்டிஸ்டுகளுக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸே இல்லை. நயன்தாரா டூயட்டிற்குக் கூடப் பயன்படுத்தப்படாததே உச்சக்கட்ட கொடுமை. சூர்யாவைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பிரேம்ஜி உடனான அவரது கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை!

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

vasu

ஹாட்-ட்ரிக் வெற்றி கண்ட ராஜேஷ் – சந்தானம் கூட்டணி கொடுத்த படமா இது?!  குடியும் குடி சார்ந்த மனிதர்களுமாக பயணிக்கும் இக்கூட்டணியிடம் உஷாராகிக் கொண்டது தமிழ் சினிமா. ழைய படங்களில் பார்த்த அதே மேட்டர்தான். லொகேஷனும் ஹீரோயின்களும் மட்டுமே மாறுகின்றன. பெண்களை மட்டம் தட்டிப் பேசும் வசனங்களை மட்டுமே வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் வண்டியை ஓட்ட முடியும் ராஜேஷ் ஜி?

தமிழ்நாடு அரசே டாஸ்மாக்கை மூடினாலும் ராஜேஷ் படத்திலிருந்து அதை நீக்க முடியாது. பெண்களுக்கு எதிரான போராட்டம், கணவனின் அல்லோகலம் என ஆண்களை குஷிப்படுத்தும் ஏரியாக்கள் சில இருந்தாலும் ஏனோ எதையுமே ரசிக்க முடியவில்லை. விஷால் கெஸ்ட் ரோலில் வரும் அந்த கிளைமாக்ஸில் அவர் தத்துவம் கூற,  இவர்களது ஞானக்கண் திறப்பதும்….அட போங்கப்பா…!

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை

purampokki_vc1
தூக்குத் தண்டனை தேவையா எனக் கேட்கும் ஜனநாதனின் இப்படத்தில்,  கம்யூனிசத்தோடு சேர்ந்து சினிமாத்துவமும் சற்று தூக்கலாகாவே இருந்தது. இது போன்ற படங்களுக்கு தேவையான  எதார்த்தம் இதில் மிஸ்ஸிங். எமலிங்கம் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு,  பல விசயங்களை வெடித்துச்  சிரிக்க வைக்கும் காமெடியாகவும் விமர்சனம் செய்து,  ஜனரஞ்சகப்படுத்தவும் மறக்கவில்லை ஜனநாதன். டாஸ்மாக் பாரில் வாங்கித் தின்ற சைடு டிஷ்கான கடன் அக்கவுண்டு நோட்டில், எமலிங்கம் கையெழுத்து போடப் போகும்போது அவன் கையைப் பிடித்து போலீஸ் இழுக்க,  அவன் கேட்கும்  “இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இல்லையா ?” என்ற கேள்வி அரசாங்கத்திற்கான அடி. ஆனால், ஆர்யா கதாபாத்திரம் விஜய் சேதுபதி, ஷாம் கதாபாத்திரங்கள் போல் அழுத்தமாக இல்லை. ஏதோ ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது திரைக்கதையின் வேகம்.

Comments

comments