NTLRG_160121135734000000விஜயசேதுபதி நடித்துள்ள சேதுபதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சித்தார்த், சிபிராஜ், ஷக்தி, கரு.பழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், விஜயசேதுபதி, ரம்யா நம்பீசன், டைரக்டர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், விஜயசேதுபதி பேசும்போது, இந்த சேதுபதி படத்தை பண்ணலாம் என்று டைரக்டர் அருண்குமார் என்னிடம் சொன்னபோது, போலீஸ் ரோல் எனக்கு செட்டாகுமா என்ற டவுட் இருந்தது. மேலும், எனக்கு கதை மேல 50 சதவிகிதம்தான் நம்பிக்கை இருந்தது. ஆனால் அருண்குமார் மேல் நூறு சதவிகிதம் இருந்தது. பண்ணையாரும் பத்மினியும் மாதிரி படம் எடுக்கிறதுக்கு ஒரு பெரிய தில் வேண்டும். அதனால் அவரை நம்பிதான் படப்பிடிப்புக்கு போனேன். அதோடு கேமராமேன் தினேஷ் ரொம்ப நம்பிக்கை கொடுத்தார். இந்த படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கிற நிவாஸ் பிரசன்னா கலக்கிட்டாரு. தெகிடிக்குப் பிறகு இந்த படத்திலும் மூன்று விதமான பாணியில் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

ரம்யா நம்பீசனை பீட்சாவில் நடித்தபோது பார்த்தது. இப்போது இரண்டு குழந்தையோடு இந்த படத்தில் நடித்திருக்கிறோம். ரம்யா செமயா நடிச்சிருக்காங்க. நல்ல ஆர்ட்டிஸ்ட். எனக்காவது மொழி தெரியும். புரிஞ்சிக்கிட்ட நடிச்சிடுவேன். ஆனா அவருக்கு தமிழ் பெரிதாக தெரியாதபோதும், உடனே சுட்ட தோசை மாதிரி சுடச்சுட நடிச்சிட்டு போயிடுவாங்க. அவ்ளோ டேலன்ட். திரும்பவும் அவரோட நடிச்சது ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றார்.

நடிகர் சித்தார்த் பேசுகையில், விஜயசேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது முதல் படத்திலிருந்தே அவரை ரசித்து வருகிறேன். பேட்டிகளில்கூட அவரைப்பற்றி நிறைய பேசியிருக்கிறேன். அவரோட சக்சஸப் பார்த்து வயிற்றெரிச்சலா இருக்கு. ரொம்ப கஷ்டம். அவர் நடிச்ச பீட்சா படம் பார்த்ததில் இருந்தே அவரோட ரசிகனாகி விட்டேன். அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும் படம் பார்த்து அசந்து விட்டேன். அவரோட நடிப்பு மட்டுமின்றி ஸ்கிரிப்டும் சூப்பராக இருந்தது.

அதனால் அந்த பட டைரக்டர் அருண்குமாரை தொடர்பு கொண்டு சார் உங்க அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவரோ, என் பர்ஸ்ட் பட ஹீரோ விஜயசேதுபதியுடன் தான் அடுத்த படத்தை பண்ணப்போறேன் என்றார். அதுக்கு அப்புறம் பீட்சா பண்ணின என் ப்ரண்டு கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். இல்லை சார் என் பர்ஸ்ட் பட ஹீரோ விஜய சேதுபதிய வச்சுத்தான் என்னோட அடுத்த படத்தை பண்ணப்போறேன் என்றார். அதுக்கு அப்புறம் சூதுகவ்வும் படம் பண்ணிய நலன் குமாரசாமியிடம் சார் நாம ஒரு படம் பண்ணுவோம் என்றேன். அவரும், இல்லை சார் நான் விஜயசேதுபதிய வச்சு அடுத்த படம் பண்ணப்போறேன் என்றார். இப்படி எல்லோரும் விஜயசேதுபதிய வச்சே படம் பண்ணினா எங்களை வச்சு யாருய்யா படம் பண்ணுவா என்று கோபமாக கேட்டேன்.

மேலும், விஜயசேதுபதிக்கிட்ட நல்ல டேலன்ட் இருப்பதால் அவரை வைத்தே தொடர்ந்து அவரது டைரக்டர்கள் படம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் இப்படி எல்லா நல்ல டைரக்டருமே அவரை வைத்தே படம் பண்ணினால் நாங்களெல்லாம் என்ன செய்வது. அதனால் ஒரு இரண்டு படம் அவரை வைத்து பண்ணினால் எங்களைப்போன்ற நடிகர்களை வைத்தும் ஓரிரு படங்கள் பண்ணினால் நாங்களும் பிழைத்துக்கொள்வோம். மேலும், இப்படி எல்லா டைரக்டர்களுமே விஜயசேதுபதியை தேடிச்செல்வதற்கும் ஒரு காரணம் உள்ளது. அவர் நடிப்பில் ஒரு பச்சோந்தி. எந்த கதையாக இருந்தாலும் அப்படியே மாறி விடுவார். அந்த கதைக்கு நான் மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்கிற அளவுக்கு முழுமையாக மாறி நடிப்பார். அந்த அளவுக்கு அற்புதமான நடிகர் விஜயசேதுபதி. அந்த வகையில், அவரது நடிப்பு மட்டுமின்றி, அவர் டயலாக் பேசும் ஸ்டைலும் ரசிகர்களைப்போன்று எனக்கும் பிடித்திருக்கிறது என்றார்.

நடிகர் சிபிராஜ் பேசும்போது, எத்தனையோ போலீஸ் படம் பாத்திருக்கேன். ஆனா அக்மார்க் தமிழ்நாடு போலீஸ் படத்தை நான் இப்பத்தான் பார்க்கிறேன். விஜயசேதுபதி நடிச்ச பண்ணையாரும் பத்மினியும் படத்தை நான் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. அந்த படத்தை இயக்கிய அருண்குமாரே இந்த படத்தையும் இயக்கியிருப்பதால் இதுவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நவாஸ் பிரசன்னா தெகிடியில் நன்றாக பின்னணி இசையமைத்திருந்தார். அதோடு இந்த படத்தில் நான் யாரு, நான் ராஜா என்றொரு பாடலுக்கு இசையமைத்து நான் இன்னொரு ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார்.

நடிகர் ஷக்தி பேசுகையில், சேதுபதி என்கிற டைட்டீலே போலீஸ்க்கு ஆப்ட்டா இருக்கு. சத்ரியன் படத்தில் கேப்டன் விஜயகாந்த் போலீசாக நடித்தார். அவருக்குத்தான் அந்த கெட்டப் சிறப்பாக இருந்தது. அவருக்கு பிறகு விஜயசேதுபதிக்கு போலீஸ் கெட்டப் பொருந்துகிறது. அந்த வகையில் சின்ன கேப்டன் விஜயசேதுபதிதான். நான் சிபியெல்லாம் சினிமா பின்னணியோடுதான் வந்தோம். ஆனால் விஜயசேதுபதி எந்த பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வந்து ஜெயிச்சிருக்காரு. சினிமாவுல உழைப்பும், திறமையும்தான் ஜெயிக்கும். மேலும், போலீஸ் பைக் ஓட்டி பாத்திருக்கோம். ஜீப் ஓட்டிப்பார்த்திருக்கோம். சைக்கிள் ஓட்டிகூட பார்த்திருக்கோம். ஆனா இந்த படத்தில்தான் ஆட்டோ ஓட்டி பாத்திருக்கேன். இந்த படம் வெற்றி பெறும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. சத்ரியன்-2வுக்கு என்னோட வாழ்த்துக்கள் என்றார்.

 

Comments

comments