நிவின் பாலி என்ற ஒரு வார்த்தைக்கு மலையாளம் மற்றும் தமிழ்ப் பெண்கள் மத்தியில் இருக்கும் வசீகரம் இப்போது கொஞ்சம் அதிகம் தான். ஆனால், இந்த வசீகரத்தை சாதாரணமாகப்பெற்று விடவில்லை நிவின் பாலி.

nivin-11

ஒரு சாதாரண நடுத்தரக்குடும்பத்தைச்சேர்ந்த நிவின் பாலிக்கு சினிமாவில் வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடவில்லை .நிவின் அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்ற இன்ஜினியரிங் மாணவர். 2006 -ல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 2 -ஆண்டுகள் பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவருக்கு , தந்தையின் இறப்பு பேரிடியாக அமையவே,வேலையை உதறிவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார்.

அங்கு தன் தாய்க்கு உறுதுணையாக இருந்து கொண்டே, சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர் நிவின் பாலி.

2010-ல் வினித் சீனிவாசனுடைய ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பிற்காக’ ஆடிசனுக்கு சென்றவர்களில் நிவினும் ஒருவர். ஆனால் இறுதியில் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 12 நடிகர்களில் ஒருவராகக்கூட நிவின் இடம்பெறவில்லை. நடிக்க வந்தவர்களில் ஒருவர் கழன்றுகொள்ளவே, மனம் தளராமல் இறுதியில் தன்னை நடிப்பில் மெருகேற்றிக்கொண்டு ஆடிசனில் கலந்து கொண்டு ,படத்திற்குள் ரீ-என்ட்ரி ஆனார்-நிவின். இது அவருடைய விடாமுயற்சிக்கு திறந்த ஒரு நம்பிக்கையான கதவு.

Nivin

படத்திற்குள் அறிமுகம் கிடைத்த வருடத்திலேயே தான் காதலித்த,தன் கல்லூரித்தோழி ரின்னா ஜாயினை மணந்து கொண்டார்.திருமணத்திற்குப்பின் ‘டிராஃபிக்’,’மெட்ரோ’ என தன் கேரியரில் அடுத்தடுத்து கிடைத்த படங்களிலும் சின்னரோலாக இருந்தாலும், தன்னை உருமாற்றிக்கொண்டு வெளுத்து வாங்கினார்.

பின்னர் 2012-ல் வெளியான ‘தட்டத்தின் மறையத்து’ என்றொரு மலையாளப்படம்,அவருடைய கேரியரில் ஒரு அதிரடி திருப்புமுனையைத் தந்தது. ஒரு முஸ்லீம் பெண்ணிடம்,காதல் வயப்பட்டவராய் உருகி,உருகி நடித்து அப்ளாஸ் அள்ளியிருப்பார் நிவின். ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு, அடுத்தடுத்து தேர்வு செய்யும் படங்களில் முந்தைய சாயல் இருந்துவிடக்கூடாது என மெனக்கெட்டு வெரைட்டியுடன் நடிக்கத்தொடங்கியிருந்தார். அப்படி ஒரு வெரைட்டிக்கு கிடைத்த அங்கீகார வெற்றிகள் தான் “நேரம்,1983,பெங்களூர் டேஸ் ,வடக்கன் செல்பி,பிரேமம்’ என நீண்டது.

நேரம் – படத்திலேயே தமிழ் ,மலையாளம் என இரண்டு மொழிகளில் யதார்த்தமான நடிப்பில் கலக்கியவர். மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம்,மலர் டீச்சரின் புகழால் தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்துவிட்டார். மலையாளத்திலிருந்து ஒரு மொழிமாற்றம் இல்லாத திரைப்படம் தமிழ் நாட்டில் ஹிட்டாயிருந்தால் ,அது ” பிரேமம்”  படம் மட்டுமே.

nivin-22

இதன் மூலம் அவரது வளர்ச்சி தமிழ், மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூறலாம்.

இதை சரியாகப்புரிந்து கொண்ட பின் தான் ,எடுத்த முக்கிய அவதாரம் தான் தயாரிப்பாளர் அவதாரம். இதில் ஹீரோவும் அவரே தான். ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.இப்படத்தில் மலையாள டைரக்டர் ஜீட் அந்தணி ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படம் தான் ‘ ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’. அபிரித் சைன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக புதுவேடம் ஏற்றுள்ளார். இப்படத்தின் ‘பூக்கள் பனி நீர் பூக்கள் ‘ எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகி ,இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. இப்படத்திலுள்ள பாடலுக்கான இசையை ஜெர்ரி அமல்தேவ்வும்,படத்திற்கான பிண்ணனி இசையை ராஜேஷ் முருகேசனும் செய்து வருகின்றனர்.

இப்படமும் நிவின்பாலியின் ஹிட் லிஸ்டில் இடம்பெறும் என சொல்லாமல் சொல்லுகிறது “பூக்கள் பனி நீர் பூக்கள்” பாடல்!

Comments

comments