NTLRG_160112142843000000

தமிழ் சினிமா வெளியீடுகளில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று பொங்கல். பொங்கல் விடுமுறை என்பது எப்படியும் மூன்று நாட்களுக்கு இருக்கும். சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் சேர்ந்து வந்தால் எப்படியும் ஐந்து நாட்களுக்கு இருக்கும். சென்னையைத் தவிர பிற ஊர்களில் அந்த நாட்களில் தினமும் ஐந்து காட்சிகள் வரை புதுப் படங்களைத் திரையிடுவார்கள். அதனால் சராசரியாக ஒரு படம் அந்த முதல் ஐந்து நாட்களில் சுமார் 25 காட்சிகள் வரை திரையிடுவதற்கான வாய்ப்பு உண்டு.

ஒரு காட்சிக்குத் தோராயமாக 300 பேர் வரை படம் பார்க்க வந்தால், ஒரு நாளைக்கு 1500 பேர் வரை படம் பார்ப்பார்கள். ஒரு டிக்கட்டின் விலை குறைந்த பட்சம் 100 ரூபாய் என்றால், ஒரு நாள் வசூலாகும் தொகை 1,50,000 ரூபாய். அப்படியென்றால் ஒரு படம் சுமார் 300 தியேட்டர்களில் வெளியானால் அந்தப் படத்தின் வசூல் ஒரு நாளைக்கு 4,50,00,000 ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், மல்டிபிளக்ஸ் தவிர மற்ற தியேட்டர்களில் முதல் சில நாட்கள் அவர்களாகவே ஒரு படத்திற்கான டிக்கட் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால் வெளியூர்களில் உள்ள சாதாரண தியேட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை 200 ரூபாயாக இருக்ககலாம். அப்படி இருந்தால் ஒரு படத்திற்கான வசூல் முதல் நாளில் 9 கோடியிலிருந்து 10 கோடி வரை வசூலாகவும் வாய்ப்புள்ளது. இந்தப் பொங்கல் படங்களைப் பொறுத்தவரையில் ‘ரஜினி முருகன்’ படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பும், வசூலும் கிடைக்க வாய்ப்புள்ளதாக வினியோக வட்டாரங்களும், தியேட்டர் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. அந்த எதிர்பார்ப்பில் தான் அவர்கள் ‘ரஜினி முருகன்’ படத்திற்கு தியேட்டர்களைத் தர ஆர்வமாக இருக்கிறார்களாம்.

‘ரஜினி முருகன்’ படம் இன்றைய நிலவரப்படி சுமார் 300 தியேட்டர்களில் வெளியாகும் என்கிறார்கள். அதனால், அந்தப் படம் முதல் நாளிலேயே சுமார் 10 கோடி வரை வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மற்ற படங்களுக்கு தலா 200 தியேட்டர்கள் வரை கிடைக்கும் என்ற நிலையே இன்று வரை உள்ளது. அதனடிப்படையில், ‘தாரை தப்பட்டை’ படம் 5 கோடி ரூபாய் வரையிலும், ‘கதகளி’ படம் 4 கோடி ரூபாய் வரையிலும், ‘கெத்து’ படம் 3 கோடி ரூபாய் வரையிலும் முதல் நாளில் வசூலாகும் என்ற ஒரு கணக்கைத் தெரிவிக்கிறார்கள். இது அந்தந்தப் படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மாறவும் வாய்ப்புள்ளது. படங்கள் வெளியான பின் முதல் நாள், முதல் காட்சியின் முடிவில் இந்த வசூல் கணக்கை அடுத்த சில நாட்களுக்கும் சேர்த்து கணித்துவிட முடியும் என்றும் சொல்கிறார்கள்.

எப்படியும் பொங்கல் விடுமுறை முடிவதற்குள் இந்தப் படம் இவ்வளவு வசூல், அந்தப் படம் அவ்வளவு வசூல் என்று சில பல ‘கோடி’களில் சமூக வலைத்தளங்களும் நிரம்பி வழியப் போவது உறுதி.

 

Comments

comments