NTLRG_160108142652000000

இயக்குனர் பாரதிராஜா, தனது லட்சிய படமாக சொல்லிக் கொண்டிருப்பது குற்றப்பரம்பரை என்ற படத்தைத்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஒரு சமூகத்தினரை குற்றப்பரம்பரை சட்டத்தால் கொடுமைப்படுத்தினார்கள். சுதந்திரத்திற்கு பிறகும் அந்த சட்டத்தை அவர்கள் வாபஸ் வாங்கவில்லை. அந்த மக்கள் அந்த இழிவான நிலையிலிருந்து வெளிவர கடுமையாக போராட வேண்டியது இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அந்த சமூகத்தினர் பட்ட துன்பத்தை சொல்லும் படம்தான் குற்றப்பரம்பரை. இது பல குறும்படமாக வந்திருந்த போதும் பிரமாண்ட பட்ஜெட்டில் நெடும்படமாக இயக்க வேண்டும் என்று பாரதிராஜா சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதனை தற்போது செய்யப்போகிறவர் பாலா. தற்போது படங்களில் நடித்து வரும் எழுத்தளார் வேல.ராமமூர்த்தி குற்றப்பரம்பரை என்ற பெயரிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார். இந்த நாவலைத்தான் பாலா படமாக இயக்க இருக்கிறார். இதில் விஷால், அரவிந்த்சாமி, ஆர்யா, அதர்வா, ராணா நடிக்கிறார்கள், இவர்கள் தவிர இந்தி நடிகர் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பொங்கலுக்கு சசிகுமார், வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை வெளிவருகிறது. அதற்கு பிறகு இந்தப் படம் பற்றிய முறையான அறிவிப்பை பாலா வெளியிடுவார் என்று தெரிகிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் லைக்கா அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Comments

comments