Thani-Oruvan-IIFA-Utsavam-Awards-740x431

International Indian Film Academy (IIFA) என்கிற ஈஃபா விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன
2015- ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு ஈஃபா விருது வழங்கும் விழா இரண்டு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அந்த விழாவில் ராஜமௌலி இயக்கிய ‘பகுபலி’ திரைப்படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன.

தமிழின் சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர் (சத்யராஜ்), சிறந்த குணச்சித்திர நடிகை (ரம்யாகிருஷ்ணன்), சிறந்த பின்னணிப் பாடகர் (ஹரிச்சரண்), சிறந்த பின்னணிப் பாடகி (கீதா) ஆகிய பிரிவுகளில் ‘பாகுபலி’ படம் விருதுகளை அள்ளியது!

‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த ‘ஜெயம்’ ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருதும், அப்படத்தை இயக்கிய மோகன்ராஜாவுக்கு சிறந்த இயக்குநர் விருதும், அர்விந்த் சாமிக்கு (தனி ஒருவன்) சிறந்த வில்லன் நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டன.

‘மாயா’ படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த இசை அமைப்பாளராக அனிருத் (மாரி), சிறந்த நகைச்சுவை நடிகையாக கோவை சரளா (காஞ்சனா-2), சிறந்த பாடலாசிரியராக(?) தனுஷ் (மாரி) ஆகியோரும் விருது பெற்றனர்.

தனக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள மோகன்ராஜா,

“அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு,

நான் இயக்குனராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை நீங்கள் அளித்து அன்பிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் அரவனைப்பாலும், ஆதரவாலும் எனது இயக்கத்தில் வெளிவந்த “தனி ஒருவன்” திரைப்படம் 2015ம் ஆண்டின் வெற்றிப்படமாக அமைந்தது.

தனி ஒருவன் படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் விதமாக, IIFA Utsavam விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த இயக்குனர் விருது எனக்கும், சிறந்த கதாநாயகன் விருது எனது தம்பி ஜெயம் ரவி அவர்களுக்கும், சிறந்த வில்லன் விருது அரவிந்த்சாமி அவர்களுக்கும் தனி ஒருவன் படத்திற்காக கிடைத்தது.

இத்தருணத்தில் எங்களுக்காக வாக்களித்த ரசிகர்களுக்கும், எங்களது திறமையை ஊக்குவித்த நடுவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.”

என்று ஊடகங்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

மோகன் ராஜாவின் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்க, கடந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக காக்கா முட்டை, குற்றம்கடிதல் போன்ற பல படங்கள் இருந்தும் அவற்றுக்கு விருது வழங்கப்படாமல், தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட பாகுபலி படத்துக்கு தமிழின் சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகள் வழங்கப்பட்டது தமிழ்ப்படத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

குறிப்பாக இயக்குநர்கள் பலரை ஈஃபா விருதுக்குழுவின் செயல் வருத்தப்பட வைத்துள்ளது.

பாகுபலி மிகச்சிறந்த படம்தான். அந்தப் படத்தை தெலுங்குப்படமாக கணக்கில் எடுத்துக் கொண்டால் அப்படத்துக்கு எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் வழங்கலாம்.

அதற்கு பாகுபலி படத்துக்கு தகுதி இருக்கிறது.

அதைவிட்டுவிட்டு பாகுபலி படத்தை நேரடி தமிழ்ப்படம்போல் கணக்கில் எடுத்துக் கொண்டு அப்படத்துக்கு தமிழ்ப்படம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது மிகப்பெரிய மோசடி.

இதை ஏற்க முடியாது.’ என்று குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.

Comments

comments