1

தமிழ் சினிமாவில் இப்போது பார்ட் 2 கதைகளுக்கு பஞ்சமில்லை. அரண்மணை, டார்லிங், கலகலப்பு, விஸ்வரூபம், சிங்கம்(எஸ்3), எந்திரன், பாகுபலி என வரிசையாக பார்ட் 2 படங்கள் வெளிவர இருக்கிறது. பார்ட் 1 முதலிலும், பார்ட் 2 இரண்டாவதாகவும் வெளிவருவது தான் மரபு. இதையும் மீறி புதுமை படைக்க இருக்கிறார்கள் சதுரம் படத்தை உருவாக்கி இருக்கும் புதுமுகங்கள். அதாவது இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள்.

ஷா என்ற ஹாலிவுட் படத்தை தழுவி சதுரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் சுப்பிரமணியசிவாவிடம் உதவியாளராக இருந்த சுமந்த் ராதாகிருஷ்ணன். அரிமா நம்பியில் நடித்த யோக் ஜாபி, அம்புலி படத்தில் நடித்த ஷனம் ஷெட்டி, ரியாஸ்கான் நடித்துள்ளனர். மெரீனா, விடியும் முன் படங்களுக்கு இசை அமைத்த கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். அம்புலி 3டி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சதிஷ்.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒருவன் வாழ்க்கையை பற்றி உணர்ந்து கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் மாற்றங்கள்தான் கதை கரு. இதனை இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளனர். முதலில் 93 நிமிடங்கள் கொண்ட இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார்கள். அதை பார்க்கும்போது முதல் பாகத்தில் அப்படி என்னதான் நடந்திருக்கும் என்கிற ஆர்வம் வருமாம். அப்போது முதல் பாகத்தை வெளியிடுவார்களாம்.

 

Comments

comments