0c9a5800843a3450394d62af0c9c2996

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் திகில் படத்துக்கு இசையமைப்பாளாரக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளது.

இயக்குநர் செல்வராகவன், தனது ஆஸ்தான இசையமையப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தின் தெலுங்கு பதிப்புக்கு பிறகு பணியாற்றவில்லை. சில காரணங்களால் பிரிந்த இந்தக் கூட்டணி தனுஷின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனுஷின் அந்தப் படத்தை ஆரம்பிக்கும் கால அவகாசத்தில், இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் திகில் படம் ஒன்றை இயக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் ரெஜினா இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால் இந்தப் படத்துக்கான இசையை சந்தோஷ் நாராயணன் கவனிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 28 தொடங்கும் என தெரிகிறது.

தற்போது ரஜினி நடித்து வரும் ‘கபாலி’, விஜய்யின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’, நலன் குமரசாமி இயக்கத்தில் ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Comments

comments