சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழன் அன்று ஆர்கேவி கல்லூரி அரங்கத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

காலை 9.45 மணி

Factory Boss / Da gong lao ban | Dir.:Wei Zhang China|2014|102’

ஒரு பொம்மை உற்பத்தி தொழிற்சாலை பணச்சிக்கலில் இருக்கிறது. வேலை இல்லாமல், ஊதியம் பெறாத ஊழியர்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், அதன் உரிமையாளர் லின் தன் தொழிற்சாலையை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்கிறார். அப்போது குறைந்த லாபத்தைத் தரும் அமெரிக்க கம்பெனி ஒன்றின் வியாபரத்தை ஒப்புக் கொள்கிறார். அதில் பல சட்டவிரோதங்களும் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் அங்கிருக்கும் குற்றங்களை தெரியப் படுத்த ரகசியமாக உள்ளே ஊடுருவுகிறாள்.

காலை 11.45 மணி

The Chambermaid Lynn / Das Zimmermädchen Lynn | Dir.:Ingo Haeb Germany|2014|90’

ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கிறாள் லின். தன்னுடைய தயக்கத்தாலும், அச்சத்தாலும் வாடிக்கையாளர்களைப் பார்க்காமல் இருப்பது, அவர்கள் இல்லாத சமயத்தில் அறையைத் தூய்மையாக்குவது, அவர்களின் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாள். இதனால் அவளுடைய வேலை பாதிக்கப்படுகிறது. சிறிது நாட்களில் பாலியல் தொழிலாளியான சியராவின் அறிமுகம் கிடக்கிறது. துணிச்சலையும், நிதானமின்மையும் கொண்ட சியாராவின் வருகையால் லின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. லின் புதியதொரு உலகத்துக்குள் நுழைகிறாள்…

மதியம் 2.45 மணி

Lamb | Dir:Yared Zeleke | Ethiopia|2015|94’

இப்ராய்ம் ஒரு இளம் எதியோப்பியன். மலைமுகட்டு வீட்டில் அவனது தந்தை அவனைவிட்டு போய்விட அவனிடமிருந்து பிரிக்கமுடியாத ஆடு மட்டும் அவனோடு வசிக்கிறது. வறட்சியின் பிடியில் சிக்கிய தாயகத்தில் இருந்து வந்த அவனது உறவினர்கள் அவனை வந்துப் பார்க்கும்போதும் அவனுடைய ஆடு அவனிடமிருந்து பிரிக்கமுடியாதவை என்பதைக் காண்கிறார்கள். எப்ராய்ம் நல்ல வளர்ப்பில் வளர்ந்தவனல்ல. ஆனால் அவனிடம் நிறைய திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவன் ஒரு சிறந்த சமையல்காரன். இந்த புதிய கிராமமம் தன்னை நிராகரித்ததை நினைத்து வருந்துவதோடு அவனுக்கு துன்பம் மட்டுமே தந்த பழைய கிராமத்து சிந்தனையும் அவனுக்கு வருகிறது. ஒருநாள் அவனது மாமா, அடுத்த பண்டிகை தினத்தில் அவனது ஆட்டை தியாகம் செய்யவேண்டுமென கூறுகிறார். எனினும், அன்று அந்த இளம் சிறுவன், தோழமைமிக்க இந்த ஆட்டைக் காக்க எதுவேண்டுமானாலும் செய்யத் தயார் என நினைக்கிறான்.

மாலை 4.45 மணி

Life Eternal | Dir: Wolfgang Murnberger | Austria |2015|120’

தான் வளர்ந்து ஆளான கிராஸ் என்ற நகரத்திற்கு நீண்டநாள் கழித்து திரும்புகிறான் பிரென்னர் எனும் நடுத்தர வயது மனிதன். அங்கு அவன் தன்னுடைய பழைய நண்பர்களை எதிர்கொள்கிறான். இளைஞனாக அவன் இருந்த காலத்தில் தனது பழைய காதலியோடு இணைந்து அவன் ஒரு நபரை கொலையும் செய்திருக்கிறான். மேலும், நீண்ட நாள் கோமாவிலிருந்து திரும்பி வந்திருக்கும் அவன் தன்னைக் கொல்ல முயன்றவனை தேட முயற்சிக்கிறான்.

எனினும் பிரென்னரை கொல்ல முயன்றது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல என்பது புரிகிறது. அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருமே அவனின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்பது உறுதியாகிறது.

மாலை 7.15 மணி

The Blue Apple Tree / El Manzano Azul | Dir:Olegario Barrera Venezuela|2012|95’

நகரத்தில் வளரும் பதினொரு வயதுச் சிறுவன் டியகோ. தன் கோடை விடுமுறையைப் பெரிதாக அறிமுகம் இல்லாத தன்னுடைய தாத்தாவுடன் கழிக்க நேருகிறது. பரபரப்பாக இருந்து பழகிய டியகோவால், வெனிசுலாவின் கிராமத்தில் தன் பொழுதுகளைக் கழிக்க முடியவில்லை. தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இல்லாமலும், கிராமத்தில் வசிக்கும் சிறுவர்களின் கேலி, கிண்டல்களாலும் டியகோவின் மனம் வெறுத்துப் போகிறது. ஒரு நாள், வித்தியாசமான நீலநிற ஆப்பிள் மரத்தையும், சிறுமி ஒருத்தியையும் காண்கிறான் டியகோ. அவை காரணமே இல்லாமல் அவனுக்குப் பிடித்துப் போகிறது. சில வித்தியாசமான சம்பவங்களுக்குப் பிறகு, தன்னுடைய தாத்தாவுடன் மிகவும் நெருக்கமாகிறான் டியகோ. வெறுத்த கிராமம் மெல்ல மெல்ல அவனுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது.

Comments

comments