001

‘பீப் பாடல்’ சர்ச்சை தொடர்பான வழக்கில் தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். வெள்ளத்தையே மறக்கடிக்க செய்யும் அளவிற்கு ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியவர்கள் சிம்புவும், அனிருத்தும். இவர்களது கூட்டணியில் உருவான ‘பீப் பாடல்’ எனும் ஆபாச, கொச்சை பாடல் இணையதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பின. இருவர் மீதும் கோவை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சிம்பு தொடர்ந்த வழக்கில், அவருக்கு முன்ஜாமின் இன்று(ஜன.4) வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசும்போது…. என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள். யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது.

எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, குறிப்பாக இறைவனுக்கு நன்றி என்றவர், பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நான் கொடுத்த புகாருக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 

Comments

comments