01 (85)

‘கெத்து’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டது குறித்து அரசுத் தரப்பு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் மேலாளர் எஸ்.சரவணமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

எங்கள் நிறுவனம் சார்பில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளோம். உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கெத்து’ திரைப்படம் கடந்த 14-ம் தேதி திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரி விண்ணப்பித்தோம். ஆனால், ‘கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை’ என்று கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டனர்.

வணிகவரித் துறை ஆணையரால் அமைக்கப்பட்ட கணினி மைய இணை ஆணையர் டி.ரமாதேவி, தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் எம்.சி.தியாகராஜன், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், பாடகர்கள் ஏ.எல்.ராகவன், வாணி ஜெயராம், பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் ஆகியோர் கொண்ட குழு படத்தை பார்த்து ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால் ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தை இல்லை எனக் கூறியுள்ளது.

திருக்குறள், திருப்புகழிலும் பல்வேறு இலக்கண, இலக்கியங்களிலும் ‘கெத்து’ என்ற தமிழ் வார்த்தை இடம் பெற்றுள்ளது.

பொதுவாக இதுபோன்ற குழுக்களில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களே நியமிக்கப்படுகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால், உதயநிதி நடிக்கும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்படுகிறது. ரஜினிமுருகன், திருட்டு விசிடி, கோலி சோடா, நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிங்கம்-2, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல், 3, ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளித்தவர்கள், உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க மறுக்கின்றனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் விரோதம் உள்ளது. எனவே ‘கெத்து’ படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘கெத்து’ என்பது தமிழ் வார்த்தைதான் என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக்கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஹரிகுமார், ‘கெத்து என்பது தமிழ்ச் சொல் இல்லை என தமிழ் அகராதியிலேயே கூறப்பட்டிருக்கிறது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘திருப்புகழிலேயே ‘கெத்து’ என்ற வார்த்தை இருப்பதை தமிழ் பாடல்கள் மூலம் அறிகிறேன். எனவே, அந்த வார்த்தை அகராதியில் இல்லை என்பதை அரசு தரப்பு நிரூபித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கூறி விசாரணையை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ‘கெத்து’ படத்துக்காக வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி குறித்த விவரங்களையும் அன்றைய தினம் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டார்.

Comments

comments