01 (85)

ஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என ஹாலிவுட் திரை நட்சத்திரம் வில் ஸ்மித் அறிவித்துள்ளார்.

ஏபிசி என்ற தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் வில் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கெனவே, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட், இயக்குநர் ஸ்பைக் லீ ஆகியோர் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிப்பு காரணம் என்ன?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறுபான்மை இனத்தவர் இடம்பெறவில்லை. இது திட்டமிட்டே நடைபெறுகிறது என்பது நடிகர் வில் ஸ்மித்தின் குற்றச்சாட்டு.

விருதுக்காக தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 20 நடிகர்களில் ஒருவர்கூட சிறுபான்மை இனத்தவர் இல்லை என்பதே இந்த புறக்கணிப்புக்கான காரணம் என நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள மூவருமே வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

கண்டுகொள்ளப்படாத ‘கன்கஸன்':

அண்மையில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ‘கன்கஸன்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் இடம் பெறவில்லை. இது திட்டமிட்ட புறக்கணிப்பு எனக் கூறி வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும், சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அவர் ஃபேஸ்புக்கில் அறிவித்திருந்தார்.

மனைவிக்கு ஆதரவு:

மனைவி ஜடாவை ஆதரித்து தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய வில் ஸ்மித், “என் மனைவி மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். அவருக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் தவறு நடப்பதால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று தோன்றினால் அது சரியான முடிவே. அவரைப் போன்ற பெண்மணியை மனைவியாக அடைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார்.

இன பிரச்சினைக்கு தீர்வு காண்போம்:

அவர் மேலும் கூறும்போது, “என் இனத்தவர் மத்தியில் எங்களுக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னமும்கூட சில பிரச்சினைகள் எழுகின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்கள் கடமை. அவ்வாறு தீர்வு காண முடியாவிட்டால் பிரச்சினை உருவாக நாங்களும் ஒரு காரணம் என்றே அர்த்தம்.

என் மனைவியின் வார்த்தைகள் இன பாகுபாடுக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பு. இது அவருக்கான, எங்கள் குடும்பத்துக்கான குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்திற்கான குரல்.

அமெரிக்காவின் பெருமிதமே அதன் பன்முகத்தன்மைதான். அந்த பன்முகத்தன்மை திரைத்துறையிலும் எதிரொலிக்க வேண்டும். ஆனால், ஹாலிவுட்டில் தவறு நடக்கிறது.

ஒவ்வொரு படைப்பாளியிடமும் ஒரு திறமை இருக்கிறது; அழகியல் பொதிந்திருக்கிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் தெரிவுப் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமளிக்கிறது.

இந்த தெரிவுப் பட்டியல் ஆஸ்கர் அகாடமியை பிரதிபலிக்கிறது. ஆஸ்கர் அகாடமியின் நிலைப்பாடு ஒட்டுமொத்த ஹாலிவுட் திரைத்துறையின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது. ஹாலிவுட்டின் இந்த சார்பு பார்வை சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பார்வையாக கருதப்படும்.

பிரிவினைவாதம், இனவாதம், மத பேதம் நோக்கி அமெரிக்க திரைச் சமூகம் மெல்ல மெல்ல சரிந்து கொண்டிருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஹாலிவுட்டில் இது தொடர நான் விரும்பவில்லை” என்றார் வில் ஸ்மித்.

Comments

comments