அரண்மணை 2, சவுகார் பேட்டை: வருகிறது 2016ம் ஆண்டு பேய்கள்
கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. காஞ்சனா 2, டார்லிங், மாயா, யாமிருக்க பயமே, டிமாண்டி காலனி என கடந்த ஆண்டு வெற்றிப் பேய்கள் வலம் வந்தன. இந்த ஆண்டும் தமிழ் சினிமா பேயாட்டம் ஆட இருக்கிறது. அதனை துவக்கி வைக்கிறது அரண்மணை பேய்.
சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா நடித்துள்ள அரண்மணை பேய் இரண்டாவது பாகமாக வருகிற 29ந் தேதி வெளிவருகிறது. ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது அரண்மணை படக் கதையின் தொடர்ச்சி அல்ல, தனிக் கதைதான் என்றாலும் ஹன்சிகா, மற்றும் சுந்தர்.சியின் கேரக்டர்கள் மட்டும் முதல் பாகத்தின் நீட்சியாக வரும்.
அடுத்து வருகிறது சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, நடித்துள்ள இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கி உள்ளார். மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தயாரித்துள்ளார். ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சவுகார் பேட்டையில் பணப் பேய் பிடித்த வில்லன்களின் செயல்களால் பிரிந்த ஒரு காதல் ஜோடி பேயாகி எப்படி பழிவாங்குகிறது என்கிற கதை. இரண்டு படங்களையுமே தேணாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.