1

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து பல சிக்கல்களுக்கு ஆட்பட்ட லைகாநிறுவனம் இப்போது அதிரடியாக தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியசினிமாவிலும் கால்பதிக்கிறது.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ படத்தை 350 கோடி செலவில் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதேபோல இந்தியசினிமாவிலேயே அதிகசம்பளம் வாங்கிய நடிகர் என்று புகழப்பட்ட சிரஞ்சிவி நடிக்கவிருக்கும் கத்தி படத்தின் தெலுங்குமாற்றப்படத்திலும் இணைதயாரிப்பாளராக தன்னைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது லைகாநிறுவனம்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் உச்சநட்சத்திரங்களைப் பிடித்தாயிற்று என்ற நிலையில் இந்தியில் உச்சநட்சத்திரம் இல்லையென்றாலும் முன்னணிநடிகர்களில் ஒருவராக இருக்கும் அக்ஷய்குமாரை வைத்து கத்தி படத்தின் இந்தி மொழியாக்கத்தினைத் தயாரிக்கவிருக்கிறார்கள். இந்தப்படம் அடுத்தஆண்டு பாதிக்குமேல்தான் தொடங்கவிருக்கிறதாம்.

தெலுங்கு கத்தி மொழிமாற்றுப் படத்தின்  தயாரிப்புப் பொறுப்பை சிரஞ்சீவியின் நிருவனமே கவனித்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. தமிழில் 350 கோடி படம் தெலுங்கில் 150 கோடி மதிப்பிலான படத்தில் இணைந்திருப்பது, இவற்றோடு இந்தியில் சுமார் நூறுகோடியில் ஒருபடம் என்று மிகப்பெரிதாகத் திட்டமிட்டு செயலில் இறங்கியிருக்கிறது லைகாநிறுவனம்.

இவைதவிர தமிழில் சாம்ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறது லைகா. வெற்றிமாறனின் விசாரணை உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்யவும் உள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் சில படங்களின் வெளியீட்டில் அவர்கள் பின்புலமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் கணக்கிட்டுப்பார்த்தால் ஒரேநேரத்தில் சுமார் ஆயிரம்கோடியை திரைத்துறைக்குள் இறக்கி ஏற்கெனவே படத்தயாரிப்பில் இருக்கிறவர்களை வியக்கவைத்திருக்கிறது அந்நிறுவனம்.

Comments

comments