NTLRG_151214172240000000

அனிருத், சிம்பு இருவரது கூட்டு முயற்சியில் (?) உருவான ‘பீப் சாங்’ குறித்து நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு எதிர்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பல மாதர் சங்கங்கள் காவல் துறையிடம் புகார் அளித்தும், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தும் சிம்பு, அனிருத்திற்கு எதிராக பொங்கி எழுந்து வருகிறார்கள்.

கோவை காவல் துறையும் சம்பந்தப்பட்ட இருவரையும் டிசம்பர் 19ம் தேதி கோவை காவல் துறை ஆணையர் முன் ஆஜராகும்படி சம்மனைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் திரையுலகத்தில் உள்ள பலரும் இது குறித்து இன்னமும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பாடல் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். வைரமுத்து கூட பட்டும் படமாலே கருத்து சொல்லியிருக்கிறார். ‘கண்கள் இரண்டால்…’ புகழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மட்டும் அவருடைய பிளாக்கில் இது குறித்த கண்டனங்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். சிம்பு, அனிருத் போன்ற ஸ்டார், பிக் ஸ்டார் இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கவே கூடாது, இதெல்லாம் அவர்களுக்குத் தேவையா என்ற ரீதியில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நடிகை குஷ்புவிடம் டிவிட்டரில் பலர் இது குறித்து கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “நான் அந்தப் பாடலைக் கேட்கப் போவதில்லை, கேட்கவும் விருப்பமில்லை, வெள்ளத்திற்குப் பிறகு பல நிவாரண வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது, எனது நேரத்தை வீணாக்காதீர்கள்,” என்று நேற்று டிவிட்டரில் தெரிவித்துவிட்டார். எதைப் பற்றியும் தயங்காமல் கருத்து சொல்லும், அரசியல்வாதியாகவும், பொறுப்பான அம்மாவாகவும் இருக்கும் குஷ்புவும் இந்த ஆபாசப் பாடல் பற்றி எதுவும் கூறாதது ஆச்சரியமாக உள்ளது.

நடிகர் ஒய்.ஜி. மகேகந்திரா இந்தக் கொடுமையான பாடலை உருவாக்கியது யார் என்ற உண்மையைக் கண்டுபிடித்து அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று கொதிப்புடன் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், ஆர்வக் கோளாறில் சிலர் இந்த ‘பீப் சாங்’கிற்கு ஆதரவு தெரிவித்து வரும் சிலரை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகிறார்கள். இனி இப்படியொரு நிகழ்வு தமிழ்த் திரையுலகத்தினரிடமிருந்து வரக் கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திரையுலகத்தின் முக்கிய புள்ளிகள் இதைக் கண்டிக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

 

Comments

comments