001

பசங்க படத்தில் இயக்குனரானவர் பாண்டிராஜ். அதையடுத்து வம்சம் படத்தை இயக்கியவர் பின்னர் மெரினா என்ற சிறுவர்கள் படத்தை இயக்கினார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கியவர் இப்போது பசங்க-2 படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து அவரது இயக்கத்தில கதகளி, இதுநம்ம ஆளு ஆகிய படங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில் கதகளி பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் அவர் ஒரு சிறுவர்கள் படத்தை இயக்கப்போகிறாராம். இதுபற்றி பாண்டிராஜ் கூறுகையில், சின்ன வயதில் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வருபவர்களை நான் ஆச்சர்யமாக பார்ப்பேன். காரணம் அவர்களது டிரஸ். நம்மால் அந்த மாதிரி டிரஸ் போட முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால், நகரத்துக்கு வந்த பிறகுதான் நகரவாசிகளை விட கிராமத்தில் வசிப்பவர்களே கொடுத்து வைத்தவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

அதோடு சிறுவர்களை மையமாக வைத்து நான் படமெடுப்பதிலும் ஒரு வியாபாரம் உள்ளது. சிறுவர் சிறுமியர் தியேட்டருக்கு வந்தால் கண்டிப்பாக பெற்றோரும் வருவார்கள். அதனால், சிறுவர்களுக்கான பிரச்சினைகளை சொல்லி அவர்களை எப்படி பெற்றோர் வழிநடத்த வேண்டும் என்ற நல்ல விசயத்தை சொன்னால் சிறுவர்களுடன் வரும் பெற்றோரும் அதன்படி நடப்பார்கள் என்ற எண்ணத்திலேயே இன்றைக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சினையை கதையாக்குகிறேன். மேலும், இப்போது பசங்க, பசங்க-2 படங்களை இயக்கியிருக்கும் நான், அடுத்து பசங்க-3, பசங்க-4, பசங்க-5 என தொடர்ந்து சிறுவர்களுக்கான படங்களை எடுத்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் பாண்டிராஜ்.

 

Comments

comments