NTLRG_151217145610000000

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகை கஜோல். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகி உள்ளார்.  இந்த தில்வாலே தனக்கு எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்தது, இந்தப்படம் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்…

தில்வாலே படம் ரிலீஸாக உள்ளது. எப்படியிருக்கிறது உங்கள் மனநிலை.?

பொதுவாக நடிகைகள் தங்களது படம் ரிலீஸாகும் நாளான்று மிகவும் பதட்டமாக இருப்பார்கள், ஆனால் உண்மையாக சொல்கிறேன், எனக்க அப்படி ஒரு மனநிலை இல்லை. இந்தப்படத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தில்வாலே படம் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும், படத்தில் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ், சென்ட்டிமென்ட் என எல்லா விஷயங்களையும் இயக்குநர் ரோகித் ஷெட்டி கொண்டு வந்துள்ளார். தில்வாலே முழுக்க முழுக்க ஒரு விடுமுறை கொண்டாட்டம் போன்று இருக்கும்.

இந்தப்படத்தில் நடிக்க முக்கிய காரணமே உங்கள் மகள் தானாமே.?

ஆமாம், உண்மை தான். என்னுடைய மகளுக்காகத்தான் இந்தப்படத்தில் நடித்தேன். ஆனால் எனது மகள் இந்தப்படத்தை பார்த்து திருப்தி அடைவாளா.? என்று தெரியவில்லை. என் மகள் என்னிடம் அடிக்கடி, படத்தில் அழுகை காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்பார். ஆகையால் இந்தப்படத்தில் அழுகை காட்சியில்லாமல் நடித்துள்ளேன். அந்தவகையில் எனது மகளுக்கும் இந்தப்படம் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

தில்வாலே படத்திற்கு தில்வாலே துல்கனியா லே ஜாகிங்கே படத்திற்கும் ஏதாவது ஒற்றுமை உள்ளதா.?

முதலில் இந்த இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமை உள்ளது. முதலாவது இரண்டு படங்களின் ஆரம்பமே தில்வாலே தான். இரண்டாவது, இரண்டு படங்களிலும் நடிகர்கள் ஒன்று(நான், ஷாரூக்). மற்றபடி வித்தியாசம் என்று பார்த்தால் அது நிறைய உள்ளது. இரண்டு படங்களுக்கும் 20 வருட வித்தியாசம் உள்ளது, ஒருபெரிய தலைமுறை இடைவெளி உள்ளது. இரண்டு படங்களின் கதை முற்றிலும் மாறுபட்டது.

சினிமாவில் இன்று எந்தமாதிரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.?

சினிமாவில் இன்று நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைக்கு ரசிகர்கள் படங்களில் எல்லா விசயங்களையும் உற்று நோக்கி கவனிக்க தொடங்கியுள்ளனர். இந்த உலகம் மொபைல் உலகமாக மாறிவிட்டது, அதனால் உடனுக்குடன் ஒரு படம் பற்றிய தகவல்கள் பரவி விடுகின்றன. முன்பெல்லாம் நடிகர்கள், குறிப்பிட்டு ஒரேமாதிரியான விசயங்களை படத்தில் செய்வார்கள். ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. ரசிகர்கள் புதிதாய் எதிர்பார்க்கிறார்கள். இதை நானும் ”மை நேம் இஸ் கான்” படத்தின்போது உணர்ந்தேன். அந்தப்படத்தில் நடித்தபோது நானும் நிறைய விசயங்களை கற்று கொண்டேன். இன்றைக்கு போட்டி பிறருடன் கிடையாது, அவர்களுக்குள்ளேயே தான் போட்டி உள்ளது.

இப்பவும் அழகாக, ஸ்லிம்மாக இருக்கிறார்கள் எப்படி.?

சிரிக்கிறார்…! உங்கள் பாராட்டுக்கு நன்றி. முதலில் நான் இங்கு ஒன்றை கூற விரும்புகிறேன், நான் எப்போது உடலை குறைக்க வேண்டும், ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியது கிடையாது. ஆனால் உணவு கட்டுப்பாடு வைத்திருக்கிறேன், தினமும் உடற்பயிற்சி செய்கிறேன், இதைதவிர வேறு எதுவும் நான் செய்வது கிடையாது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்றால், முதலில் உள்ளுக்குள் நீங்கள் அழகாக இருக்க வேண்டும். அப்படி நீங்கள் பார்த்து கொண்டால் நீங்களும் கண்டிப்பாக அழகாகவும், மிகழ்ச்சியாகவும் இருக்கலாம். இதைத்தான் நான் செய்கிறேன்.

இந்தப்படத்தில் இளம் தலைமுறையினருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்.?

இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறை நடிகர்கள் என்னை கவர்ந்துவிட்டனர். தொழில் அவ்வளவு பக்தியாக இருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு முன்பாக வருகிறார்கள், ஷூட்டிங் முடிந்த கையோடு உடனே புறப்பட்டு சென்றுவிடுகிறார்கள். தாங்கள் பார்க்கும் தொழிலை சிறப்பாக செய்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்தபுதிதில் ஷூட்டிங்கின் போது தான் நிறைய கற்று கொண்டேன், ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்கள் வீட்டிலேயே நடிப்பு பயற்சி மேற்கொள்கிறார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் நன்றாக கையாள தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் ஒருகுறை உள்ளது. அதாவது, இன்றைக்கு உள்ள நடிகர்களிடத்தில் ஒற்றுமையோ, நல்ல உறவோ பெரிதாக இல்லை.

இன்றைக்கு பாலிவுட் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது இதுபற்றி உங்கள் கருத்து.?

தகவல் தொழில்நுட்பத்தால் இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. இன்றைக்கு எந்த உலகத்திலிருந்தும் வேறு ஒருவருக்கு பேச முடியும். நாடு விட்டு நாடு, ஏன் கண்டம் விட்டு கண்டம் கூட பேசலாம். ஒரேநேரத்தில் 10 ஜெர்மனிக்காரர்கள், 10 ஜப்பான்காரர்கள், 10 இங்கிலாந்துக்காரர்கள்… என்று பேச முடியும். ஆன்லைனில் டிரைலர் வெளியீடு, நேரடி பிரஸ்மீட் நிகழ்ச்சி உள்ளிட்ட எல்லாமே தகவல் தொழில்நுட்பம் வளர்ந்ததால் தான் செய்ய முடிகிறது. அப்படி பார்க்கையில் தகவல் தொழில்நுட்பத்தால் பாலிவுட் சினிமாவும் உலகளவில் வளர்ந்துள்ளது.

இவ்வாறு கஜோல் கூறினார்.

 

Comments

comments