NTLRG_151228193342000000

சில வருடங்களுக்கு முன்புவரை இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதனால் ரஜினி நடிக்கும் புதுப்படம் எப்போது அறிவிக்கப்படும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பார்கள். அவரது படம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் நீண்ட இடைவெளிவிட்ட ரஜினி கடந்த சில வருடங்களாக இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இந்த வழக்கத்தையும் மிஞ்சுகிறவகையில் இப்போது கபாலி, 2.0 என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது. கபாலி படம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் 2 ஆம் பாகமான ‘2.0’ படத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி.

‘கபாலி’யின் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை பிப்ரவரிக்குள் முடித்துவிட்டு, ஏப்ரலுக்குப் பிறகு ‘2.0’ படத்தில் முழுமூச்சில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி. ‘கபாலி’ படத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. ‘2.0’ படத்தை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர்.

 

Comments

comments