NTLRG_151123100754000000

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இயக்குனரான ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் ‘கில்லிங் வீரப்பன்’ படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனை மையப்படுத்திய கதையாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது என்பதை படத்தின் தலைப்பைப் பார்த்தே அனைவரும் புரிந்து கொள்ளலாம். இதற்கு முன் பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்களை இயக்கி பரபரப்பாகப் பேசப்பட்டவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து இதற்கு முன் தமிழிலும் சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா இயக்குவதால் அவர் பல விஷயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே வைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருக்கலாம், இன, சாதி உணர்வு அடிப்படையிலான விஷயமாகவும் இருக்கலாம். கன்னடத்தில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இப்படம் வெளியாக உள்ளது. காவிரிப் பிரச்சனை, ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது எழுந்த பிரச்சனை ஆகியவை இந்தப் படத்தில் எப்படி சொல்லப்பட்டிருக்கும் என்று தமிழர்களும், கன்னடர்களும் ஒரு அச்சத்துடனேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஓரளவிற்கு மறந்துவிட்ட நிலையில், காவிரிப் பிரச்சனை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று ‘கில்லிங் வீரப்பன்’ பிரச்சனையும் சேருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தெரிந்துவிடும். திரைப்படங்கள் மூலம் சொல்லப்படும் விஷயங்கள் தென்னிந்திய மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதற்கு இந்தப் படம் மீண்டும் ஒரு உதாரணமாக இருக்குமா ? அல்லது சில ராம்கோபால் வர்மா படங்கள் போல வந்த சுவடு தெரியாமல் போய்விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Comments

comments