1

டெல்லியில் 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமீர்கான், “என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது” என்றார். அமீர்கானின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைகளில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கபீர்கான்: பஜ்ராங்கி பாய்ஜான், ஏக் தா டைகர், உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அமீர்கானுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அமீர்கான் சொன்னதை பலரும் புரிந்துகொள்ளாமல் பிரச்னையாக பேசி வருகிறார்கள். அவர் தேசம் மதச்சகிப்பின்மையின்றி உள்ளதெனக் கூறவில்லை. தேசத்தின் சூழல் அப்படி இருப்பதாகவே கூறியுள்ளார்.

ரவீணா டான்டன்: மும்பையின் மத்தியில் குண்டு வெடிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள். நாடு என்ன செய்தது எனக் கேட்பவர்கள், நாம் என்ன நாட்டுக்கு செய்தோம் என்பதையும் யோசிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

சஞ்சய் குப்தா: ஜாஸ்பா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் கூறுகையில், இதிலிருந்து என்ன தெரிகிறது அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என சொல்லவில்லை. முழுமையாக பேட்டியை பார்க்கவும். அவர் பயப்படுவதாகவே சொல்லியிருக்கிறார். மேலும் இதிலிருந்து ஒரு விஷயம் மட்டுமே நன்றாகப் புரிகிறது. மனதில் உள்ள விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது என போகிறபோக்கில் சீண்டியும் விட்டுள்ளார் சஞ்சய் குப்தா.

ஏ.ஆர்.ரஹ்மான்: கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஷாருக்கான்: ” நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையென்று ஒரு போதும் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக கட்டமைக்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டு விட்டது. அதன் காரணமாக பின்விளைவுகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னிடம் நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, நான் அந்த விஷயம் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் இளைய சமுதாயம் ஒருங்கிணைந்து இது போன்ற விஷயங்களை தவிர்த்து விட்டு நாட்டை ஜனநாயக ரீதியில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறினேன் எனக் கூறியுள்ளார் ஷாருக்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி: “மத்திய அரசைப் பற்றியோ, மோடியைக் குறித்தோ கேள்வி எழுப்பினால் அவர்கள் எல்லாரும் தேசப்பற்று இல்லாதவர்கள், தேசவிரோதிகள், உள்நோக்கம் கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவதை விட்டு விட்டு, மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களை, அவர்களை சென்றடைந்து உணர்வதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்” என்றார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Comments

comments