asவிஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன் அழைப்பிதழில் இன்றைய முக்கிய ஹீரோக்கள் படம் இடம் பெற்றிருந்தது. யார் யார் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் இல்லாமல் இருந்தது.

விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட அத்தனை பேரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மீடியாக்கள் குவிந்தனர். ஆனாலும் கடைசி வரை ரஜினி, கமல் உள்ளிட்ட எந்த முன்னணி நடிகரும் கலந்து கொள்ளவில்லை, ஜெயம் ரவி, விமல், சிபிராஜ் மட்டுமே இன்றைய இளம் நடிகர்கள். மற்றவர்கள் விஜயகாந்த் காலத்தில் அவருடன் நடித்தவர்கள், அவரை வைத்து இயக்கியவர்கள்.

ரஜினி, கமல் இருவரும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்களாம். மேலும் இது சினிமா விழா, முழுக்க முழுக்க சினிமா விழாவாகத்தான் இருக்கும் என்ற உத்தரவாதம் தரப்பட்டதாம். ஆனால் முக்கிய நடிகர்-நடிகைகள் யாரும் வராததால் விஜயகாந்த் மேடையேறினார்.

ஆளும் கட்சிக்கு எதிராக விஜயகாந்த் மிகவும் தீவிரமாக இருப்பதால் அவர் விழாவில் கலந்து கொண்டு தேவையில்லாமல் ஆளுங்கட்சியின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்று கருதியே அனைவரும் விழாவுக்கு வராமல் புறக்கணித்து விட்டார்கள் என்று விஜயகாந்த் தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

ஆயிரம் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதும் விஜயகாந்த் ஒரு நடிகர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து நடிகர் சங்க கடன்களை அடைத்து அதனை தூக்கி நிறுத்தியவர். நடிகர்களுக்கு வந்த பிரச்னைகளை முதல் ஆளாக நின்று தீர்த்து வைத்தவர். அப்படிப்பட்டவர் மகன் விழாவில் நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளாதது வருத்தமான ஒன்று என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

மகன் படவிழாவில் ஒரு வார்த்தைகூட விஜயகாந்த் அரசியல் பேசவில்லை. அவர் கட்சிக்காரர்கள் மேடையேற்றப்படவில்லை. அவ்வளவு ஏன் விழாவுக்குகூட அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

 

Comments

comments