asஎதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல், யாரை நடிக்க வைத்தால் படம் ஹிட்டாகும் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் சினிமாக்காரர்கள். பெரிய ஹீரோக்களை தேடிப்போனால் பல கோடி சம்பளம் கேட்டு பயமுறுத்துகிறார்கள். அதோடு கோடிக்கணக்கான ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு அவர்களின் கால்ஷீட்டுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கவும் வேண்டும்.

புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால், அந்த படத்தை வாங்க ஆள் இருக்காது. சொந்தமாக படத்தை ரிலீஸ் செய்தாலோ தியேட்டரில் படத்தைப் பார்க்க ஆள் இருக்காது.

இந்தப்பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவே வேறுதுறையில் பிரபலமானவர்களை நடிக்க வைக்க எண்ணுகின்றனர் தயாரிப்பாளர்கள். இதன் மூலம் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் இசையமைப்பாளர்களைகூட ஹீரோவாக்க விரும்புகிறார்கள்.

சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ்குமாரை டார்லிங் படத்தில் ஹீரோவக்கினர். அவர் தற்போது பென்சில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே விஜய் ஆண்டனி சில படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த வரிசையில் ஹிப் பாப் தமிழா ஆதியும் சேர்கிறார்.

பொங்கலுக்கு வெளியான விஷால் – சுந்தர்.சி.கூட்டணியின் ஆம்பள திரைப்படம் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ஆம்பள படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். ஆம்பள படத்திற்கு இசை அமைத்திருப்பவர் ஹிப் பாப் தமிழா ஆதி. இந்தப் படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம்! ஆம்பள படத்தின் மூலம் ஆதியை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சுந்தர்.சி.பேசும்போது, ஆம்பளயின் வெற்றிக்கு ஆதியின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆம்பள மூலம் இசை அமைப்பாளராக அவரை அறிமுகப்படுத்திய எனக்கு என்னுடைய பேனரில் படம் தயாரித்து அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என்றே நம்புகிறேன் என்றார்.

ஆம்பள படத்துக்கு இசையமைப்பதற்கு முன் ஹிப் ஹாப் தமிழா உட்பட சில ஆல்பங்களில் பாடி நடித்துள்ளார் ஆதி.!

 

Comments

comments