saலிங்கா படம் உருவாக காரணமான நடிகர் ரஜினி தான், பிரச்னையயும் தீர்த்து வைக்க வேண்டும் என, வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த்- அனுஷ்கா – சோனாக் ஷி சின்கா நடித்த, லிங்கா படம், டிச.,12ம் தேதி தியேட்டர்களில் திரையிடப்பட்டது. படத்தை வாங்கிய தமிழக வினியோகஸ்தர்கள், எதிர்பார்த்தபடி வசூல் இல்லாததால், பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளளோம். ரஜினி இப்பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் எனக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில், லிங்கா படத்தின் திருச்சி, தஞ்சை வினியோகஸ்தர் சிங்காரவேலன் பேசியதாவது:

தஞ்சை, திருச்சி ஏரியாவில், லிங்கா படத்தை வௌியிட, 8 கோடி ரூபாய்க்கு வாங்கினேன். 30 சதவீதம் தான் வசூல் ஆனது. என்னை போல வினியோகஸ்தர்கள் பலர் நஷ்டமடைந்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர், ராக்லைன் வெங்கடேஷ், வௌியீட்டு உரிமை பெற்ற ஈராஸ் இன்டர்நேஷல், தமிழக வௌியீட்டு உரிமை வாங்கிய, வேந்தர் மூவீஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு எங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என, கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் மிகுந்த மன உளைசலுக்கு ஆளானோம். ரஜினி இப்பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைக்க ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம்.

தயாரிப்பாளரை சந்திப்பது எப்படி?

நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பட வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் நடிகர் எப்படி பொறுப்பேற்க முடியும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரி தான்.

லிங்கா படத்தின் தயாரிப்பாளரை கர்நாடகாவில் இருந்து ரஜினி தான் அழைத்து வந்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், அவர் உறுப்பினராகவில்லை.

அந்த தயாரிப்பாளர் சென்னை வரும் போது, நட்சத்திர ஓட்டல்களில் தங்கிவிட்டு சென்று விடுகிறார். நாங்கள் எங்கு போய் எங்கள் நஷ்டத்தை தெரிவிக்க முடியும்.

இதனால் தான் இப்பிரச்னையில் ரஜினி தலையிட்டு, பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்கிறோம்.எங்கள் கோரிக்கை நியாயமானது என, தெரிவித்துள்ளோம்.

பாபா, கோச்சடையான் படங்களில் நஷ்டம் ஏற்பட்டபோது, ரஜினி ஈடு செய்துள்ளார்.

பிரச்னையை தீர்க்க ரஜினிக்கு முட்டுகட்டை: ரஜினி நல்லவர் தான். ரஜினி இப்பிரச்னையை தீர்த்து வைக்க விடாமல், ஏதோ ஒரு தீயசக்தி தடுக்கிறது இந்த தீய சக்தி தான் பட பிரச்னைக்கு முடிவு காணமுடியாத வகையில் தடுக்கிறது.

80 லட்சம் ரூபாய் கமிஷன்: வேந்தர் மூவீஸ் தலைமை செயல் அதிகாரி என, தன்னை தானே கூறிக்கொள்ளும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, பட பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் தடுப்பதற்கு காரணம், படத்தின் மொத்த வினியோகஸ்தரான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து, தமிழக வெளியீட்டு உரிமையை, வேந்தர் மூவீசிற்கு வாங்கி கொடுத்தற்கு, சிவா, 80 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கியுள்ளார்.

எங்களின் பிரச்னை குறித்து, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விசாரித்தபோது, பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன் என, இவர் தான் தடுத்திருக்கிறார். இப்பிரச்னையில், சிவா கமிஷன் ஏஜன்ட்டாக மட்டுமே இருக்கிறார்.

ரஜினி தீர்த்து வைப்பார்: ரஜினிகாந்த் தாயுள்ளத்துடன் எங்கள் நஷ்டத்தை தீர்த்து வைப்பார்; எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என, நம்புகிறோம்.

இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால், சோர்ந்து போய்விட மாட்டோம். தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

தமிழ்நாட்டில், ரஜினி பெரிய சுப்பீரியரா இருக்கார். அவர் வீட்டுக்கு வந்து மோடி டீ குடிக்கும் அளவுக்கு உயர்வாக இருக்கிறார். தமிழக முதல்வர் மூலமாக, எங்கள் பிரச்னையை தீர்த்து வைக்க, மக்கள் முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

படம் குறித்து, ஓவர் பில் டப் : வினியோகஸ்தர்களிடம் படத்தை அதிக விலைக்கு விற்பதற்காக மோசடி நடந்து இருக்கிறது. லிங்கா படம் நன்றாக வந்திருக்கிறது என, எங்களிடம் படம் குறித்து, ஓவர் பில் டப் காட்டியதால் தான் நாங்களும், படத்தை நம்பி வாங்கினோம். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

படம் குறித்து சிவா வௌியிட்ட அறிக்கையில், படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கின்றனர். வினியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கும் என, கூறியிருந்தார்.

நாங்கள் நஷ்டத்தில் இருக்கும்போது, இப்படி பேசுபவர், படத்தை விற்ற போது, எங்களிடம் எப்படியெல்லாம் படம் குறித்து மிகைப்படுத்தி பேசி விற்றிருப்பார்.

அரசியல் கட்சிகள் ஆதரவு:லிங்கா படத்தால் நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்து இருக்கிறோம்.இவ்வாறு, சிங்காரவேலன் பேசினார்.

தொடர் உண்ணாவிரதம்:செங்கல்பட்டு வினியோகஸ்தர்கள் மன்னன் பேசியதாவது:

செங்கல்பட்டு ஏரியா உரிமையை, 14 கோடி ரூபாய்கு வாங்கினேன். 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் விட்டிருப்பேன். 9 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துளேன்.

விட்டுவிட முடியுமா; நீங்களே சொல்லுங்கள். நாங்கள் தயாரிப்பாளரிடம் அவரது லாபத்தில் இருந்து தான் எங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய கேட்கிறோம். பிரச்னைக்கு முடிவு காணப்படா விட்டால், தியேட்டர் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், வினியோகஸ்தர்கள் தொடர் உண்ணாவிதரம் இருப்போம். இவ்வாறு மன்னன் பேசினார்.

நடிகர் மன்சூர் அலிகான், சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் பேசும்போது, ரஜினிகாந்த் தலையிட்டு, இப்பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

நடிகர் விஜய் உதவி: நடிகர் விஜய் நடித்த, தலைவா, ஜில்லா படங்களில், வினியோகஸ்தர் சிலர் நஷ்டமடைந்தபோது, விஜய்யும், தயாரிப்பாளர்களும், நஷ்ட ஈடு வழங்கியுள்ளனர். விஜய் தன் சம்பளத்தில் இருந்து, 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என, வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

Comments

comments