asdaவிஷால் தமிழில் நடிக்கும் ஒவ்வொரு படமும் தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். கடைசியாக அவர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘பூஜை’ திரைப்படம் கூட அதே பெயரில் அங்கு வெளியாக நல்ல வசூலைப் பெற்றது. தெலுங்கில் வெளியாகும் நேரடிப் படங்களுக்கு நெருக்கமாக விஷாலின் டப்பிங் படங்களும் வசூலை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில படங்கள் நல்ல வசூலையும், லாபத்தையும் தந்திருக்கின்றன.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ‘ஆம்பள’ படமும் தெலுங்கில் ‘மகா மகாராஜு’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், கிரண், மதுரிமா, வைபவ், பிரதீப் ராவத், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்து வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் ‘மத கஜ ராஜா’ படத்தின் பெயரைப் போலவே ‘மகா மகாராஜு’ என ‘ஆம்பள’ படத்தின் தெலுங்கு டப்பிங் தலைப்பையும், ஏறக்குறைய ஒரே உச்சரிப்பில் வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. விரைவில் தெலுங்குப் படத்திற்கான பிரமோஷன் வேலைகளையும் விஷால் ஆரம்பிக்க உள்ளார். அதோடு கேரளாவிலும் விஷால், சுந்தர் .சி மற்றும் படக்குழுவினர் பத்திரிகையளார்களைச் சந்திக்க உள்ளார்களாம்.

தீபாவளிக்கும் ‘கத்தி’ படத்துடன் தைரியமாகப் போட்டி போட்டு வசூலை அள்ளி விஷால், பொங்கலுக்கும் ‘ஐ’ படத்துடன் போட்டி போட்டு அவருடைய படத்தை ரிலீஸ் செய்கிறார். ‘என்னை அறிந்தால்’ படம் தள்ளிப் போவதால் அது விஷாலுக்கு மேலும் பக்கபலமாக அமையும்.

 

Comments

comments