aaஅஞ்சான் படத்தின் தோல்வியினால் துவண்டு போயிருந்த சூர்யா மனதைத் தேற்றிக்கொண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். அஞ்சான் படத்தில் அடைந்த தோல்விக்கு மருந்தாக மாஸ் படத்தில் வெற்றியை பெற்றே தீர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் சூர்யா. நயன்தாரா, ப்ரணிதா கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் சமுத்திரக்கனி, ஜெயராம், ஆகியோருடன் வெங்கட்பிரபுவின் செட் ப்ராப்பர்ட்டியான பிரேம்ஜி அமரனும் நடிக்கிறார். மாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், குலுமணாலி, பல்கேரியா நடைபெற்று முடிந்துள்ளது. பல்கேரியாவிலிருந்து திரும்பி வந்ததும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு அங்கும் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

மாஸ் படத்தில் சூர்யா பங்குகொள்ளும் அறிமுகப் பாடல்காட்சியை அடுத்து படமாக்க திட்டமிட்டிருந்தார் வெங்கட்பிரபு. இந்தப்பாடல் காட்சியை எங்கு படமாக்கலாம் என்று ஆலோசித்தபோது, தூத்துக்குடியில் படமாக்கலாம் என்று சூர்யா சொன்னாராம். அதன்படி தூத்துகுடி செல்லவிருக்கிறது வெங்கட்பிரபுவின் மாஸ் டீம்.

தூத்துகுடி மீது சூர்யாவுக்கு அப்படி என்ன சென்ட்டிமெண்ட்? சூர்யா நடித்து ஏற்கெனவே சூப்பர்ஹிட்டான சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களில் இடம்பெற்ற அறிமுகப்பாடல்களும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் படமாக்கப்பட்டது. எனவே சிங்கம், சிங்கம் 2 படங்களைப்போல் மாஸ் படமும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே தூத்துகுடியை சூர்யா சிபாரிசு செய்தாராம்.

லொகேஷன்களில் கூட சென்ட்டிமென்ட்டா?

 

Comments

comments