asஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி படத்தை தயாரித்தவர் சேலம் சந்திரேசகர். இவரது தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு கில்லாடி என்ற படம் தொடங்கப்பட்டது. பரத் ஹீரோவாக நடித்த கில்லாடி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, சேலம் சந்திரசேகர் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார். அதற்குக் காரணம்… ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்று அப்போது குற்றம்சாட்டினார் சேலம் சந்திரசேகர். கஜினி படத்தின் பட்ஜெட்டை பல மடங்கு அதிகமாக்கிவிட்டார் என்று சொன்ன சந்திரசேகர் இப்பிரச்சனை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது எல்லாம் பழைய கதை.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணம் கில்லாடி படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. கூடல்நகர், நேபாளி என பரத் மற்ற படங்களில் பிஸியானார். பல வருடங்கள் கிடப்பில் கிடந்த கில்லாடி பல தடைகளையும் தாண்டி 2013 ஆம் ஆண்டு தூசு தட்டப்பட்டது. விரைவில் ரிலீஸ் என்று விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. பிறகு கில்லாடி மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

கில்லாடி எப்போது ரிலீஸ் ஆகும் என்று அதில் நடித்த பரத்துக்கே புரியாத புதிராக இருந்தது. அவ்வப்போது கில்லாடி படத்தின் ரிலீஸ் விளம்பரங்கள் பத்திரிகைகளில் தோன்றும். ஆனால் படம் ரிலீஸாகாது. இந்நிலையில் தற்போது வரும் 30ஆம் தேதி கில்லாடி ரிலீஸாகவிருப்பதாக தகவல் அடிபடுகிறது. கில்லாடி படத்தின் ரிலீஸ் விளம்பரங்கள் நாளிதழ்களில் தென்படுகின்றன.

இந்தமுறையாவது கில்லாடி வருமா?

 

Comments

comments