sdபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சென்னையில் கடந்த 23-ம் தேதி காலமானார். அவரது மறைவு, அமெரிக்காவில் இருந்த கமலுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. கே.பாலசந்தரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து உடனடியாக அடக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவரால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

‘உத்தம வில்லன்’ பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) காலை கே.பாலசந்தர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் பேசியது:

“அடையாளம் தெரியாத நபராக இந்த வீட்டிற்கு முதல் வாய்ப்புக்கு நன்றி சொல்ல வந்த அதே கமல்ஹாசன்தான் இப்போது வந்திருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர். என் குடும்பத்தினருக்கு அப்புறம் இவரைச் சொன்னால் அது மிகையாகாது. பதினேழரை வயதில் இங்கே வந்து இவர்கிட்ட சேர்ந்தேன். 36 படங்கள். அதிக நாட்கள் அவர்கூட இருந்திருக்கிறேன். எனக்கு சடங்குகளில் எல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும், என்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதி தகப்பனார் கூட இருந்ததை விட இவர் கூடத்தான் இருந்திருக்கிறேன்.

ஷுட்டிங் போவதற்கு இரண்டு மணி நேரம் முன்னாடியும், வந்ததிற்கு பிறகு ஒரு மணி நேரமும் போக பாக்கி நேரம் முழுவதும் ஸ்டூடியோவில் தான் இருந்தார். அதுல முக்கியமான 10 வருடங்கள் முழுவதும் அவருடன் தான் இருந்திருக்கிறேன். அங்கு கற்றது தான் தற்போது எனக்கு செலவிற்கு பயன்படும் கரன்ஸியாக இருக்கிறது.

இல்லை என்பதற்காக சொல்லவில்லை. இவரைப் போல தமிழ் சினிமாவிற்கு திறமையை கொடையாக வழங்கிய கொடைவள்ளல் யாருமே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து அல்ல. நிஜமான கருத்து. இவருக்கு இணையாக வேறொரு இயக்குநர் கிடையாது.

பாஸ்மார்க் என்று சொல்லுவார்களே அது போல 30 படங்கள் ஒப்புக் கொள்ள முடியாது என்று ஒதுக்கினாலும் மீதி 70 மார்க் இருக்கிறது. அந்த 70 படங்கள் மீண்டும் எடுக்க முடியுமா என்று இளைஞர்கள் வியக்கும் அளவிற்கு இருக்கும்.

என்னுடைய ஆசான் என்பதற்காக சொல்லவில்லை. இவர் இல்லை என்பதை ஈடுசெய்ய முடியாது என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். ஈடு செய்தாக வேண்டும் என்பது எங்கள் கடமை. அவருடைய துகள்கள் அவர் அறிமுகப்படுத்திய பல கலைஞர்களுக்குள் இருக்கிறது. அவர் போய்விட்டார்… இனிமேல் கிடையாது என்று சொல்ல முடியாது. முழு உருவத்தில் இல்லாவிட்டாலும் என்னை போன்ற பல ரூபத்தில் அவருடைய திறமை பளிச்சிட்டுக் கொண்டே இருக்கும். அதுதான் அவரிட்ட விதை. அந்த விதையில் வந்த பயிர்கள்தான் நாங்கள்.

கால தாமதமாக இங்கே வந்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு. நிகழ்ந்த அன்று வந்திருந்தால் இவ்வளவு பேசியிருக்க முடியாது. என்ன சொல்ல வந்தேன், எதற்காக அழுகிறேன் என்பதை பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அழுது முடித்துவிட்டதால் ஒரு அளவிற்கு பேச முடிகிறது. ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை, ஈடு செய்ய நாங்கள் முயற்சிக்க போவதில்லை. அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டிய ஒரு மகனின் கடமையாக எடுத்துக் கொண்டு நான் அதைச் செய்வேன்.

பாலசந்தர் எனக்கு கொடுத்த பல வரங்கள் மாதிரி, போவதற்கு முன்பு எனக்கு கொடுத்த பூச்செண்டுதான் ‘உத்தம வில்லன்’. எல்லா பணிகளும் முடிந்து, தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் லிங்குசாமி சொல்லும் தேதியில் வெளிவரும்.

பாலசந்தர் மறைவிற்கு பிறகு அவருடைய ‘மருதநாயகம்’ கேள்வி என்னை வந்து அடைந்தது. மிக சந்தோஷமாக இருந்தது. வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கே.பாலசந்தரின் 106 படங்களையும் ஆவணப்படுத்துவது என்பதை அரசாங்கம் செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால் தமிழ் திரையுலகம் சேர்ந்து செய்துவிடும். கவிதைக்கு பாரதியார் என்று சொல்லுவது; மாதிரி சினிமாவிற்கு மிக முக்கியமான மனிதர் கே.பாலசந்தர். சிருஷ்டி கர்த்தா கே.பி” என்றார் நடிகர் கமல்ஹாசன்.

Comments

comments