as‘ஐ’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 14ம் தேதியன்று சுமார் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து, நேற்று வரை படம் பல திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தொடர்ந்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மினிமம் கியாரண்டி அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்ட ‘ஐ’ திரைப்படம் வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளருக்கு வழங்கிய அட்வான்ஸ் தொகையை நான்கே நாட்களில் வசூலித்துக் கொடுத்துவிட்டதாம். ‘எந்திரன், கத்தி, லிங்கா’ படங்கள் கூட இந்த அளவிற்கு விரைவாக வசூலித்துக் கொடுத்ததில்லை என திரையரங்க உரிமையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்களாம். ஒரு இயக்குனராக ஷங்கர் மீது இந்தப் படம் குறித்த பல விமர்சனங்கள் எழுந்தாலும், தென்னிந்தியாவிலேயே சிறந்த வசூல் இயக்குனர் என்ற பெயரை ஷங்கர் இந்தப் படத்தின் மூலம் பெறுகிறார்.

‘ஐ’ படம் குறித்த சில நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தைப் பாதிக்குமோ என்று சிலர் எதிர்பார்த்தார்கள், ஆனால், விக்ரமின் கடுமையான உழைப்பும் படத்தின் பிரமோஷனுக்காக அவர் கொடுத்த பேட்டிகளும் படத்தின் வசூலை அப்படியே மெயின்டெய்ன் செய்துள்ளது.

இன்று முதல் வசூலாகும் தொகை, தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்குமிடையே போடப்பட்ட சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்ளப்படும். ஆக, இனி ‘ஐ’ வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் லாபத்தில்தான் சேரும்.

Comments

comments