asஊரெங்கும் ‘ஐ’ படத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் வசூல் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுடன் வந்த ‘ஆம்பள, டார்லிங்’ ஆகிய படங்களைப் பற்றிய பேச்சுக்கள் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் அந்த இரண்டு படங்களும் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

‘ஆம்பள’ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் சுமார் 20 கோடிக்குள் அடங்கியிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த ஒரு வாரத்திலேயே அந்தப் படம் சுமார் 30 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்கிறார்கள். படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாம். அதையும் சேர்த்தால் மொத்தம் 40 கோடி ரூபாய் வரை தற்போது வரை கிடைத்துள்ளது. படத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம் ஆகியோருக்குத்தான் சம்பளம் என்ற கணக்கில் அதிகமாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கும்.

சமூக வலைத்தளங்களில் தற்போது புகழ் பெற்றுள்ள அந்த ‘சுமோ’ பறக்கும் சண்டைக் காட்சியைத் தவிர படத்தில் பெரிய செலவு எதுவும் இருக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னர் காட்டப்படும் வீடு கூட ‘அரண்மனை’ படத்திற்காக பயன்படுத்தப்பட்ட வீடுதான் என்கிறார்கள்.

சுந்தர்.சியைப் பொறுத்தவரையில் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று அழைக்கப்படுபவர். திட்டமிட்டபடி படத்தை முடித்துக் கொடுப்பதில் வல்லவர். ஆக, ‘ஆம்பள’ திரைப்படம் அடக்க விலையையும் மீறி அமோக வசூலை அள்ளிக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

 

Comments

comments