asஅஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம்தான் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தையும் தயாரித்துள்ளார் என்று சொன்னால் சத்தியமாக கெட்ட வார்த்தையில் திட்டுவீர்கள்.

நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்..!

அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை இயக்கிய ‘சிறுத்தை’ சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ‘என்னை அறிந்தால்’ படம் வெளியான சில வாரங்களில் துவங்குகிறது!

தற்போது அந்தப் படத்திற்கான கதாநாயகி, மற்றும் பிற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை இறுதிசெய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் எல்லாம் முடிந்ததும் மார்ச்சில் படம் துவங்குகிறது.

அஜித்துக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கும், ரசிக ஆதரவுக்கும் அவரை வைத்து ஒரு படம் தயாரித்தாலே போதும்.

இரண்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடுமளவுக்கு செமத்தியாய் செட்டிலாகிவிடலாம்.

அதனால்தான் சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனமே அஜித்திடம் கால்ஷீட் கேட்டு அணுகியதாக தகவல் உண்டு.

ஸ்டுடியோ க்ரீன் மட்டுமல்ல, திரையுலகில் உள்ள முன்னணி பட நிறுவனங்கள் அனைத்துமே அஜித்தின் கால்ஷீட் கிடைக்குமா என கிளி ஜோசியம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்படியாக அஜித்தின் கால்ஷீட் என்ற ஜாக்பாட்டை அடைவதற்காக, அதன் மூலம் கிடைக்கும் கோடிகளை அள்ளுவதற்காக கோடம்பாக்கமே காத்திருக்கும்போது, அஜித் நடிக்கும் படங்களை அடுத்தடுத்து தயாரிப்பதன் மூலம் மச்சக்கார தயாரிப்பாளராகி இருக்கிறார் ஏ.எம்.ரத்னம்.

ஆரம்பம், என்னை அறிந்தால், மற்றும் சிவா இயக்கும் புதிய படம் மட்டுமல்ல, என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் அடிபடுகிறது.

அவருக்கு அடித்த அதிர்ஷ்டத்தை எண்ணி வெகு சிலர் சந்தோஷப்பட்டாலும் திரையுலகில் பலருக்கும் புகைச்சல்தான்.

அதனாலோ என்னவோ….”ஏ.எம்.ரத்னம் அஜித்தின் பினாமி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படங்களின் உண்மையான தயாரிப்பாளர் அஜித்குமார்தான்.” என்று ஒரு தீயைக் கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தில் இப்படியொரு தீ புகைந்து கொண்டிருக்க…

இது குறித்து ஏ.எம்.ரத்னத்திடமே கேட்டோம்…

”அஜித் ஸார் உடன் பழகியவர்கள், அவருடைய மனசை அறிந்தவர்கள் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். அவருடைய நம்பிக்கைக்குரியவனாக இருப்பதால் அவரை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பை எனக்கு தொடர்ந்து கொடுக்கிறார். அவர் எதிர்பார்ப்பை நான் நல்லமுறையில் பூர்த்தி செய்கிறேன். அதுமட்டுமல்ல அவர் நடிக்கும் படங்களை திட்டமிட்டபடி எடுத்து சரியானமுறையில் ரிலீஸ் செய்கிறேன்.

அஜித் ஸார் நடித்து தமிழில் சூப்பர்டூப்பர் ஹிட்டான ‘காதல் கோட்டை’ படத்தை தெலுங்கில் நான் தான் டப்பிங் செய்து வெளியிட்டேன்! அந்தப்படம் தெலுங்கில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. ‘காதல் கோட்டை’ தெலுங்கு டப்பிங் வெற்றிப் பெற்றதிலிருந்தே அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வந்தது. பல வருடங்களாக என் மனதில் இருந்த ஆசை ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்தபோது நிறைவேறியது.

‘ஆரம்பம்’ படத்தை தொடர்ந்து இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தை தயாரித்துள்ளேன். இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் நானே தயாரிக்கிறேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்” என்கிறார் ஏ.எம்.ரத்னம்.

Comments

comments